பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்கு வந்ததில் இருந்து அதன் கீழ் தொடுக்கப்பட் முதல் வழக்கில் இருந்து இன்று வரைக்கும் எந்த விட்டுக்கொடுப்புகளுமில்லாது எந்தவொரு அதிகாரத்துக்கும் சற்றும் தலைசாய்க்காது அனைத்தையும் நேர்கொண்டே பழக்கப்பட்ட இருவரும் இணைந்த சட்டவாழ்க்கையின் அறுவடையாகவே இந்நூலை என்னால் பார்க்க முடிகின்றது. இருவரும் வழக்காடிய பலநூறு வழக்குகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நாற்பது வழக்குகளை இங்கு தவராசா எழுதியிருக்கின்றார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றிக் கற்போருக்கு இந்நூல் மிகவும் சிறப்பான ஒரு வழிகாட்டியாகவும் துணையாகவும் நிச்சயம் இருக்கும் எனக் கூறுவதில் எந்தத் தயக்கமும் இல்லை.

இலங்கை வரலாற்றில் பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ன விதமான அதிர்வுகளையும் விளைவுகளையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்பதைச் சாதாரணமாகப் பார்க்கின்ற போது அது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற தனிநபர்களையும் குழுக்களையும் கட்டுப்படுத்தப் பயன்படும் ஒன்றாகவே கருதத் தக்கதாகத் தெரியும். ஆனால் இந்நூலை வாசித்து முடிக்கின்ற போது இச்சட்டம் எந்தளவுக்கு தவறான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது என்பதையும் நீதிக்குப் புறம்பாக எப்படியெல்லாம் கையாளப்பட்டிருக்கின்றது என்பதையும் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது. இலங்கை வரலாற்றில் இச்சட்டத்தைத் திறம்பட எதிர்கொண்டவர்களில் தவராசாவே முதன்மையானவர் என்பதற்கு அவர் எதிர்கொண்ட வழக்குகளே போதுமான சான்றாக அமைகின்றது. அது போலவே அவருக்கு அனைத்து வழக்குகளிலும் மிகச் சரியான பக்கபலமாகவும் உறுதுணையாகவும் மனித உரிமைச் செயற்பாடுகள் சார்ந்தும் தனிமனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் சார்ந்தும் சட்ட ரீதியில் புயலாக இயங்கிய கௌரி சங்கரியும் இப்பெருமைக்கு உரித்தானவரே. இவர்கள் இருவரும் இந்த வழக்குகளை எதிர்கொண்ட விதத்தைப் படிக்கும் போது ஒரு சட்டச் செயற்பாட்டளனுக்கு வருகின்ற உயிரச்சுறுத்தல் இயல்பானதாகவே தோன்றும். ஆனாலும் மரண அச்சுறுத்தலுக்கு எப்போதும் சவால் விட்டபடியே தமது சட்டப் போராட்டத்தில் நீதியை நிலைநாட்ட இருவரும் தம்மை இணைந்து அர்ப்பணித்திருக்கும் விந்தை இலங்கைச் சட்ட வரலாற்றில் கட்டாயம் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டியதே.

இந்நாட்டில் பயங்கரவாதத்தடைச் சட்டமும் சரி அவசரகாலச் சட்டமும் சரி மக்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் நீதியை நிலைநாட்டும் பொறிமுறையில் அவை தவறிவிட்டன என்பதையும் ஒரு தலைப்பட்சமாகவே அரச இயந்திரத்துக்கு அவசியப்பட்ட முறையில் அமுலாக்கப்பட்டன என்பதையும் தவராசா இங்கு தான் எதிர்க்கொண்ட வழக்குகளின் நேரடி அனுபவத்தில் இருந்து தெளிவாக எடுத்துரைக்கின்றார். சட்டத்துறை மாணவர்களுக்கும் சரி சமகாலத்தில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் வழக்குகளை எதிர்க்கொள்ள நேர்கின்ற சட்டத்தரணிகளுக்கும் சரி அனுபவ ரீதியில் அத்தகு வழக்குகளை எதிர்கொள்வதற்கான உட்சாகத்தையும் வழிகாட்டலையும் இந்நூல் வழங்கத் தவறவில்லை.

நாற்பது வழக்குகளிலும் நாற்பது விதமான சட்டக் குறிப்புகள் கிடைக்கின்றன. இங்கு மிகவும் ஆழ்ந்து நோக்க வேண்டிய மிக முக்கியமான அம்சம் உண்மை வெற்றி பெறுவதும் பொய் தோற்றுப் போவதும்தான். சட்டத்துறைச் செயற்பாட்டில் எப்போதும் ஒரு சட்டப் போராளியை உயிர்ப்புடன் வைத்திருப்பது இந்த வாய்மையுணர்வுதான். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தவராசாவும் கௌரி சங்கரியும் எதிர்கொண்ட அனைத்து வழக்குகளிலும் குற்றஞ்சாட்டப்பட்டு எதிராளிகளாக அல்லது பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பெருவாரியானவர்கள் விடுதலை செய்யப்படுகின்றார்கள். அவர்களின் வாழ்க்கை நீதியால் காப்பாற்றப்படுகின்றது. அந்நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு நீண்ட போராட்டம் செய்ய வேண்டியேற்படுகின்றது என்பதை இங்கு தெளிவாக அவதானிக்க முடிகின்றது. சட்டத்தை அமல்படுத்த நினைப்பவர்கள் காவல்துறையாகட்டும் அல்லது இந்நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நினைக்கும் ஆயுதப் படைத்தரப்பாக இருக்கட்டும் ஏன் ஒரு சட்டத்தை சத்தியத்தின் பக்கமாக அல்லது உண்மையின் பக்கமாக நகர்த்தத் தவறினார்கள் என்ற கேள்வி நீதித்துறையின் மீதும் நீதியின் மீதும் பற்றுக் கொண்ட இந்நாட்டின் ஒரு பிரஜைக்குத் தோன்றுவது மிகவும் இயல்பானது. இது மிகவும் கவனமாக ஆராயப்பட வேண்டியதாகும் என்று கருதுகின்றேன். பொதுவான பார்வையில் இந்தத் தேசத்துக்கு சேதம் விளைவித்தவர்களாக முன்னிலைப்படுத்தபட்டவர்கள் பல தசாப்தங்கள் கடந்து நிரபராதிகளாக விடுதலை செய்யப்படும் பொழுது ஏற்படுகின்ற மனவுணர்வுக்கு மதிப்புரை வழங்க இயலாது.

வார்த்தைகளில் அதை நிறைப்படுத்தவும் முடியாது. அத்தகைய உணர்க்கதம்பங்கள் விருவிருப்பான நாவலொன்றை அல்லது சிறுகதையொன்றைப் படிப்பது போன்று வாசகனை இறுக அணைத்துக் கொண்டு அழைத்துச் செல்லும் எழுத்தாக்கம் ஒரு சட்ட வழிகாட்டி நூலைப் படிக்கும் மனநிலையில் இருந்து விடுபடச் செய்கின்றது. எனது வாழ்நாளில் எத்தனையோ சட்டத்துறைச் சார் நூல்களைப் படித்திருக்கின்றேன். ஆனால் உணர்வுகளாலும் உறுதியாலும் இனப்பற்றோடும் தடைகள் அனைத்தையுமே சமரசம் செய்துகொள்ளாமல் எதிர்கொள்கின்ற உணர்வுநிலைப்பாற்பட்ட இதன் ஒவ்வொரு பக்கமும் நம்மை உணர்ச்சி பெறச் செய்கின்றன. மனவலிமையால் தவராசாவும் கௌரி சங்கரியும் உறுதிபெற்று உயர்ந்தே இருக்கின்றனர். சட்டத்துறைச் செயற்களத்தில் எத்தகைய முக்கியத்துவம் இவர்கள் இருவருக்கும் இருக்கின்றதோ அதேயளவுக்கு அவர்களது தனிப்பட்ட உறவில் மதிப்புமிக்க இனிமையான உயர் எண்ணப்பாடு எனக்கு இருக்கின்றது.

பல்கலைக்கழகத்திலும் சட்டக்கல்லூரியிலும் நான் அவருக்கு நேரடி கனிஷ்டமாணவர் சட்டக்கல்லூரியில் நாங்கள் ஏற்பாடு செய்த விழாவொன்றுக்கு நிதி திரட்டிக்கொண்டிருந்தோம் பொதுவாகக் கல்லூரி வளாகத்தில் நிதி திரட்டும் போது அதிசிரேஷ்ட சட்டமாணவர்களிடம் மட்டுமே செல்வது வழக்கம். மற்றவர்களிடம் கேட்பதுமில்லை அவர்கள் தருவதுமில்லை. அப்படித்தான் நாங்களும் அதிசிரேஷ்ட சட்டமாணவர்களிடம் பணம் திரட்டிக்கொண்டு கௌரி சங்கரியைத் தாண்டிச் சென்றோம் அவரிடம் நாங்கள் நிதியளிக்குமாறு கேட்கத் தயாராக இருக்கவில்லை காரணம் வளாகத்தில் நிலைக்கொண்டிருந்த வழக்கம் அப்படி. அதனாலேயே இயல்பாகவே அவரைப் பொருட்படுத்தாமல் தாண்டிச் சென்றோம். அவர் எம்மை அழைத்து விடயத்தைக் கேட்டுவிட்டு தானாக முன்வந்து ஒரு தொகையை எமக்களித்தார். இப்படித்தான் எங்களின் அறிமுகம் தொடங்கியது. அந்த நிகழ்வுக்குப் பின்னர் அவர்மீது ஒருவிதமான மதிப்புமிக்க விருப்பம் இருந்தது. இதே விருப்பு ஒரு கட்டத்தில் இனம்புரியாத குரோதமாக மாறியது. சட்டமாஅதிபர் திணைக்களத்தில் பணிபுரிந்த காலம் இளரத்தம் மிக வேகமாகத் துடிப்புடன் செயற்பட்டகாலமுந்தான். நாங்கள் நினைப்பது சரியென்றும் எடுக்கின்ற முடிவுகள் தரமானதென்றும் வீறுகொண்ட காளையாக எம்மை நாமே கருதிச் செயற்பட்ட நிலையில் ஒருவர் சந்தேக நபராக இருந்து குற்றஞ்சாட்டப்பட்டால் அவரைக் குற்றவாளியாகவே பார்த்தும் முடிவெடுத்தும் அறிக்கையிட்டுக் கொண்டிருந்த காலத்தில் எங்களது செயற்பாடுகளுக்கு பெரும் இடரை அளிப்பவராக கௌரி சங்கரி மாறியிருந்தார். நாங்கள் குற்றவாளி என்ற கோதாவில் பைல்களை நகர்த்திக்கொண்டிருக்கும் போது அவர் அவர்களை நிரபராதிகள் என்று அறிக்கையிட்டு அவர்களுக்கான சட்டப் போராட்டத்தைச் சற்றும் சளைக்காமல் செய்வார். இதனால் அவர் எங்களுக்கு நேரடியாகச் சவால் விடுத்துக் குடைச்சல் கொடுப்பவராகவே எங்களால் பார்க்கப்பட்டார். இதனாலேயே அவர்மீது அளவிலாத கோபம் ஏற்பட்டது. எந்தளவுக்கென்றால் எங்களிடம் நேரங்கேட்டால் கூடத் “தெரியாது” என்றே சொல்லிக் கடந்து போவோம். அவரைப் பொருட்படுத்தவே தோன்றாது. காலங்கடந்தது எங்களுக்கும் அனுபவம் வந்தது. நாங்கள் குற்றவாளிகளாக அறிக்கையிட்டவர்கள் கௌரியின் முயற்சியால் விடுதலை பெற்றார்கள் அந்த இடத்தில் இருந்துதான் எங்களது சிந்தனையில் மாற்றம் வரத் தொடங்கியது. நான் அறிக்கையிடல்களை ஆழமாகப் பார்க்கத் தொடங்கினேன்.

உண்மையொன்றுக்காக அவர் தன்னை அர்ப்பணிப்புடன் ஈபடுத்திக் கொண்டியங்கும் பாங்கு புரிந்தது நீதியின் பாதையில் சட்டவாட்சியின் மீது அபிமானங்கொண்ட ஒருவனாக எனக்குள் அதன் பின்னர் குரோதம் மொத்தமாக மறைந்து மதிப்பு உருவானது பின்னர் ஒரு கட்டத்தில் அந்த மதிப்பு மனிதாபிமானமிக்க தாய்மையின் மீதான விருப்பாக மாறியது. சுகயீனமுற்ற செய்தி கேள்விப்பட்டால் தன்கையாலேயே சமைத்துக் கொண்டு வருவார். அல்லது எமக்குச் சிரமமே இல்லாதபடி பொருத்தமான இடத்தில் ஓடர் செய்திருப்பார். நலனோம்புவதில் தெரியும் தாய்மையை யாரும் உணர்ந்துகொள்வர். மற்றவர்களுக்கு உதவுவதில் தன்னை அவர் ஈடுபடுத்திக்கொள்ளும் பாங்கு உண்மையிலேயே ஆச்சரியப்பட வைத்தது. குறிப்பாகக் குழந்தைகள் பெண்கள் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காக தன்னால் முடிந்த உயர்ந்தபட்ச முயற்சியையும் உதவியையும் முன்னிறுத்துவதில் அவர் பின்நின்றதேயில்லை. நீலாவனையில் இருந்து பாதிக்கப்பட்ட ஒருவர் வந்திருந்தார். கௌரியிடம் அவரை உதவிக்காகப் பரிந்துரைத்தேன். அவர் கௌரியைச் சந்தித்தார். அவரிடம் பெருமளவில் பணமிருக்கவில்லை. தன்னிடமிருந்த ஐந்நூறு ரூபாவை மட்டும் அவர் கௌரியிடம் வழங்கிவிட்டுச் சென்றார். மறுநாள் அவருக்காக வாதாடியவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணி. நிச்சயமாக ஐந்நூறு ரூபாவுக்கு ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியை நியமிக்க முடியாது. ஆனால் அவருக்கான கொடுப்பனவைத் தன் சொந்தப் பணத்தில் இருந்து கௌரி வழங்கி அந்த வழக்கில் அவரை ஆஜராகப் பணித்திருந்தார்.

இப்படி எத்தனையோ எளியவர்களை உதவிக்காக நான் கௌரியிடம் பரிந்துரை செய்திருப்பேன். அத்தனை பேருக்கும் கௌரி மிகத் தரமான உயர்நிலையில் இருக்கின்ற சட்டத்தரணிகளையே நியமிப்பார். இனப்பற்றுக்கு அவரை வரைவிலக்கணமாகக் கொள்ளலாம். அந்தளவுக்குத் தன்மக்கள் மீது ஈடுபாடு காட்டினார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற ஒரு கோசம் நம் நாட்டில் இன்னும் முழங்கிக் கொண்டிருக்கின்றது. எல்லார் பார்வைக்கும் புரிதலுக்குமப்பால் முகாமுக்குள் அடைக்கலத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் தகவல்கள் உத்தியோகப்பூர்வமாகப் பதிவு செய்யப்படல் வேண்டும் என்பதற்காக அவர் கையாண்ட யுக்திகள் விநோதமானவை. பலர் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டதில் கௌரியின் பங்கு மிகக் காத்திரமானது அறிவுஜீவித்துவமிக்கது. உண்மையான தொழில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களிடம் மட்டுமே இருக்கும் ஆற்றல் வழியாகத்தான் அத்தகைய இக்கட்டான நிலைமைகளை விகடமாகக் கையாளும் திறன் கொண்டவராக கௌரி நிலைப்பட்டு நின்றார்.

எத்தனையோ பேரை உதவிக்காக கௌரியைப் பரிந்துரை செய்து செய்து அனுப்பியிருப்பேன் அவர்களில் யாரும் வெறுங்கையுடன் திரும்பியது கிடையாது. சிறிது காலத்தில் நான் நீதியரசராகினேன் கடைசி வரையும் என்னிடம் ஒரு உதவியைக்கூட அவர் கோரிவரவில்லை. இது போல் எனக்குத் தெரிய மற்றவர்களுக்கு உதவுவதில் மட்டுமே அவர் முன்னின்றார் யாரிடமும் தனிப்பட்ட முறையில் உதவி கோருவதே இல்லை. கொஞ்சம் தெரிந்தாலே போதுமென்ற இக்காலத்தில் அவரது இப்பண்பு அதிசயமானதுதான். இப்படி இருக்கத் தக்க அவரிடம் உதவிபெற்றுவிட்டு அவருக்கே உபத்திரவம் செய்தவர்களைக் கூட நான் அறிவேன். அவர்களை தெரிந்துகொண்டாலும் கூட அந்தத் துரோகம் குறித்து ஒரு வார்த்தை பேசாமல் கடந்து போகும் கௌரியின் பண்பு அபரிமிதமானது. இப்படிப்பட்ட மனிதத்தின் மேன்மை பொருந்திய தொழில் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு சட்ட ஆளுமையை நாம் இழந்துவிட்டோம் எனும் போது மனது நிரந்தரமானதொரு துயரை தன்னில் பதித்துக்கொள்கின்றது

 

உயர் நீதிமன்ற நீதியரசர்
எஸ்.துரைராஜா
உயர் நீதி மன்றம் – இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு