மொழி மீதும் இலக்கியத்தின் மீதும் இருந்த பற்று
அளவிட முடியாது
அக்கா எனக்கு ஒரு சகோதரியாக மட்டுமன்றி பாசமிகு தாயாகவும் இருந்தார். 60 வயதை
நெருங்கிய என்னை கடைசிவரை ஒரு சிறுபிள்ளையைப் பாதுகாப்பது போல மிகவும்
கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள் .அவருடைய வாழ்வின் முக்கியமான தருணங்களில்
நானும், எனது வாழ்வின் முக்கிய தருணங்களில் அக்காவும் அருகில் இருந்தோம்.
பள்ளிப்பருவத்தில் படிப்பில் மட்டுமன்றி விளையாட்டுப் போட்டிகள், பேச்சு போட்டிகள், நடனம்,
நாடகம், கவிதைப்போட்டிகள், கதை எழுதுதல் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டு
பரிசுகளை வாங்கிக் குவித்தவர். அருநோதா கல்லூரியில் இருந்து மகாஜன கல்லூரிக்கு
மாறும் போது கல்லூரி அதிபர் அம்மாவிடம் அக்காவை தங்கள் கல்லூரியில் இருந்து மாற்ற
வேண்டாம் என மிகவும் வேண்டி கொண்டார். அக்கா எல்லோருக்கும் தாயாக இருந்தார்
சகோதரர்களின் பிள்ளைகளை மட்டுமன்றி அவர் வீட்டில் பணிபுரிவோர் குழந்தைகள்
உட்பட சகலரையுமே தன் பிள்ளையாக நினைத்து அன்பு காட்டுவார் பராமரிப்பார். சிறு வயது
முதலே அவரது பல்வேறு திறமைகளைப் பார்த்து வியந்திருந்தாலும். என் மனதில் அவர்
பழமையை மதிக்கும் புதுமைப் பெண்ணாகவே நிலைத்துள்ளார். தனது கணவருக்கும்
அவரது குடும்பத்தாருக்கும் அக்கா செலுத்திய அன்பும் மரியாதையும் எங்களை வியக்க
வைத்திருக்கிறது .அவரது மரணத் தருவாயில் கூட அத்தானை மருத்துவமனைக்கு
அழைத்து சென்ற போது மருத்துவர் அக்காவை பார்த்து ‘உங்களையும் பார்க்க களைப்பாக
உள்ளது” எனக் கூறி சோதனை செய்தமையால் தான் அன்று அவரும் அத்தானோடு மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டார். மொழி மீதும் இலக்கியத்தின் மீதும் அக்காவுக்கு இருந்த
பற்று அளவிட முடியாது. விடுமுறை காலங்களில் ஒவ்வொரு வருடமும் சந்திக்கும் போது
மணிக்கணக்கில் தமிழ் இலக்கியங்களை பற்றி உரையாடுவோம். கல்கி காண்டேகர், ரசு,
நல்ல பெருமாள், அகிலன், பாரதியார் நாடேர் புத்தகங்கள் எப்போதும் அவர் அருகில் இருக்கும்
வந்து குவியும் வழக்குகளின் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் இரவு தொலைபேசியில் அரை
மணிநேரமாவது நெருநல் வாடையோ சிலப்பதிகாரமோ சிந்தாமணியோ ஒரு கவிதையாவது
என்னுடன் சேர்த்து ரசித்து விட்டு அப்பாடா இப்போது தான் நல்ல நித்திரை வருமென தூ
ங்கப் போவார். மிகவும் களைப்பாக இருந்தால் பழைய தமிழ் பாடல்களின் வரிகளையாவது
சொல்லி இரசிப்பார் .ஆகஸ்ட் 8ம் திகதி அவர் கடைசியாக என்னுடன் சேர்ந்து ரசித்த பாடல்
அவரையும் அவரது அழகான கண்களையும் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது.
“உன் விழி வாசல் அழகான மணிமண்டபம்
அன்பு விளையாடும் புதுப்பார்வை உயிர்த்தாண்டவம்”
அன்பொளி வீசி உயிர் வழிந்தாடும் விழிகளோடு பார்த்த திசையெல்லாம் பாதிக்கப்பட்ட
இதயங்களுக்கு ஒத்தடம் கொடுத்து எல்லோரையுமே தன் குடும்பமாக நேசித்த அக்கா
அன்பின் உருவாகவே மனதில் நிலைத்திருப்பார்.
“ஆசை நெஞ்சில் குடியிருந்த அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெலாம் துணையிருந்தாள் கனவாகி மறைந்து விட்டாள் “
அன்புத் தங்கை
தர்ஷினி நந்தகுமார்
லண்டன்