மரணம் வரை மறக்க முடியாத உறவு கௌரி சங்கரி
ஒருவரைப் பிரிந்த பின்னர்தான் அவருடைய அன்பும் அரவணைப்பும் நமக்குத் தெரியும்.
அதுவரைக்கும் நாம் பெரிதாக அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இருக்கும்
போதே தனது இணக்கத்தை மற்றவர்கள் தெளிவாக உணரும்படி செய்வதில் சகோதரி
கௌரி தனித்துவமாகத் தெரிந்தார். ரத்னபுரி ராஜா ஸ்டோர்ஸ் வேலாயுதபிள்ளை
என்றால் தெரியாதவர்களே இல்லை. அப்படிப்பட்ட வேலாயுத பிள்ளையின் குடும்பத்தில்
வாழ்வதற்காகக் கண்டியிலிருந்து சென்றவள் நான். அது போலவே கௌரியும் அந்தக்
குடும்பத்தில் வாழ்வதற்காக வந்தவர். அந்த ஒன்றே எங்களுக்கிடையில் உன்னதமான
நெருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. குடும்பத்தில் இணக்கத்தை ஏற்படுத்தி எல்லாரையும்
அன்பினால் கட்டிப்போடும் இயல்பு கௌரிக்கு எப்படி வாய்த்ததோ தெரியவில்லை. மிகையாக
எதையும் வலிந்து செய்யாதவர் கௌரி. அவர் எப்போதும் தனது இயல்புகளுடனேயே
இருந்தார். அந்த இயல்புகளில் இருந்துதான் அவர் தனித்துவமாகத் தெரிந்தார்.
எனது கணவர் லண்டனுக்குச் சென்றுவிட்டார். நானும் அங்கு செல்வதற்கு சில வருடங்கள்
பிடித்தன. அக்காலப்பகுதியில் நான் அதிகமாக கௌரியுடன்தான் இருந்தேன். தன்னுடைய
உடன்பிறந்த ஒரு சகோதரியை எப்படி உபசரிப்பாரோ அப்படி என்னை அரவணைத்துக்
கொண்டார். ஒரு நாள் கூட அவரது அன்பில் மாற்றம் காண முடியாது. நான் அவருடன்
இருந்த அத்தனை வருடங்களும் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கின்றது.
நாட்டுக்கு நான் வந்தால் முதலாவது சந்திக்க விரும்புவது கௌரியைத்தான். காரணம்
அப்படியொரு நெருக்கத்தை ஒரே குடும்பத்து உறவாக சகோதரியாக அவர் எம்மில்
ஆழமாகப் பதித்துவிடும் அடையாளம் என்றும் மாறாதது.
குடும் உறவுகளைப் பேணுவதில் கௌரியை மிகைக்க யாராலும் முடியாது. தனது
உறவுகள் தன்னை எப்படிப் பார்க்கின்றார்கள் என்பதைத் தாண்டி தன்னால் அவர்களை
எப்படியெல்லாம் பார்க்க முடியும் என்று அக்கறை கொள்பவர். அந்த அக்கறையை முழுக்
குடும்பமும் இறுதிக்கணம் வரை அனுபவித்தது. இனி கௌரியை மறக்காமல் இருப்பது
ஒன்றுதான் அவரது அன்புக்கு நாம் செய்யக்கூடிய ஒரேயொரு கைமாறு.
சாந்தி லோகராஜா
சகோதரி
லண்டன்