எங்களின் அன்புக்குரிய கௌரி

மாவட்ட சபை மந்திரி கித்சிரி கஹப்பிடிய ஊடாகவே கௌரி எனக்கும் எனது மனைவிக்கும் அறிமுகமானார். நாங்கள் வெகு சீக்கிரம் இந்த தவராசா குடும்பத்திற்கு நெருக்கமானோம். எமது சகோதர சகோதரிகளை விட அதிகமாக இந்த இருவரோடும் சமீபமானோம். கௌரி எங்களின் இதயங்களை வென்ற இனிய சகோதரி, நம்பிக்கைக்குரிய நெருங்கிய நண்பி, சிலவேளை எங்களுக்குத் தாய் போல இருந்தார், பல சமயங்களில் எங்களுக்கு ஆசிரியையாக இருந்தார். எனக்கு நீதிமன்றால் ஈராண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பு அவர்கள் நீதிமன்றத்தில் எனக்காகக் கண் கலங்கினார்கள், நான் அவர்களைத் தேற்றினேன். சிறைக் கூடத்திற்குச் சென்று சிறை உடை அணிந்து வெளியே வரும்போது கௌரி எனது மனைவி தமராவுடன் அங்கு இருந்தார். நீதிமன்றத்தில் நான் நிரபராதியாக விடுதலை செய்யப்படும் வரை கௌரி தனது முயற்சியை கைவிடவே இல்லை. கௌரி யாருடைய துக்கத்திலும் அவர்களுடன் பங்கெடுத்துக் கொள்வார். வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் ஏழ்மையானவர் எனத் தெரிந்துவிட்டால் ஒரு பொழுதும் அவர்களிடம் ஒரு சதமும் பெறமாட்டார். மாறாகத் தேவையேற்படும் போது அவர்களுக்குப் பணம் கொடுத்து உதவுவார். இத்தம்பதியினர் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் வழக்குகளிலும் ஆஜராகினர், அது அவர்கள் விடுதலைப் புலிகள் என்பதற்காக அல்ல. அவர்கள் ஐ.தே. கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி பொதுஜன பெரமுனகாரர்களாக இருந்தாலும் சரி, ஜேவிபிகாரர்களாக இருந்தாலும் சரி அவர்களது துன்பத்தில் இவர்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். அந்தத் துன்பத்தின் பக்கமாக இவர்கள் இருப்பார்கள். பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பிரச்சனையில் சிக்குண்ட பொழுது எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவருடன் சேர்ந்து இருந்தார். கௌரி போன்ற ஒரு உயர்ந்த குணம் உள்ள பெண்ணைத் தேடுவது கடினம். கௌரி காலம் சென்றது அவரது கணவனுக்கு மறுவாழ்வு கொடுத்த பின்பே, என நான் நினைக்கிறேன் அவருடைய கணவர் உயிரோடு இருக்கிறார் எனில் அது கௌரியினால்தான். எனக்கும் தமாராவுக்கும் கௌரி இல்லாத குறையை எப்போதும் யாராலும் ஈடு செய்ய முடியாது. எங்களுக்கு அதனை சமாளிக்கத் தெரியவில்லை.

எங்கள் அன்பான சகோதரியே நாங்கள் உன்னை இழந்து விட்டோம். மறுபிறப்பில் மாத்திரமல்ல எல்லா பிறப்பிலும் அவளோடு நாங்களும் ஒன்றாக இருப்போம்.

எஸ் பி திசாநாயக்க
பாராளுமன்ற உறுப்பினர்