அறிவுசார்ந்த பிரகாசமான சிந்தனை கொண்டவர் அமரர் கௌரி சங்கரி தவராசா

மனிதர்கள் தமது வாழ்க்கைக் காலத்தில் தமது சமூகத்துக்குச் செய்த சேவைக்காக மதிப்பளிக்கப்பட்டு கௌரவிக்கப்படுவதோடு அவர்கள் எக்காலத்திலும் போற்றப்பட்டும் வந்துள்ளார்கள். திருமதி கௌரி சங்கரி தவராசா அவர்கள் அவரது மாற்றுக் குறையாத நேர்மை குணத்துக்காகவும் நேர்மையான சொல்லுக்கும் செயல்களுக்காகவும் தனது தொழில் சார்ந்த சேவையில் காட்டும் கடமைப்பாட்டுக்கும் விசுவாசத்துக்காகவும் மற்றவர்களால் மிகவும் கௌரவிக்கப்பட்டு வந்துள்ளதுடன் எல்லாராலும் பாராட்டப்பட்டும் வந்துள்ளார். அவர் தனது சேவை நாடுநர்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து
அவைகளை நிவர்த்தி செய்வதற்காக அவர்களின் வழக்குகளை ஆழ்ந்து படிப்பதிலும் சேவை நாடுநர்களுடன் தொடர்ச்சியாகக் கலந்தாலோசனை செய்வதிலும் உரிய பரிகாரத்தை கண்டு கொள்வதற்கான வழிவகைகளை கண்டுபிடிப்பதிலும் அதிகமான நேரத்தையும் எண்ணற்ற நாட்களையும் தனது பிரத்தியேக அறையில் செலவிட்டுள்ளார்.
அவர் பிறவியில் இருந்தே நற்பண்புகளைக் கொண்ட அறிவுசார்ந்த பிரகாசமான சிந்தனை கொண்டவர். இந்தப் பண்பைத் தனது தொழில் சார்ந்த துறையிலும் தன் சேவையை நாடி வருபவர்களுக்கு உதவுவதிலும் முழுமையாகச் செலவிட்டுள்ளதை நாம் ஒரு பெருமைக்குரிய விடயமாகக் கருத முடியும். நான் 1995 இல் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் பிரதி பதிவாளராக எனது கடமையைப் பொறுப்பேற்ற காலத்திலிருந்தே திருமதி கௌரி சங்கரி தவராசா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது. அக்காலப் பகுதியிலிருந்து, தனது தொழில் சார்ந்த விடயங்களில் எனது உதவி தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அவர் என்னிடம் வந்து எனது சேவையை பெற்றுக்கொள்வதுண்டு. அவர் எப்போதும் வசீகரமான, இரக்க குணம் உள்ள ஒருவராகவே செயற்பட்டுள்ளார். தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு தனது சுய விருப்புடனும் தானாகவும் முழுமையாகவும் சேவை செய்ய தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார். அவசர நிலைமையில் தேவை ஏற்பட்ட நேரங்களிலும் மக்கள் சவால்களைச் சந்தித்த போதெல்லாம் அவர்களுக்கு எப்போதும் உடனடியான உதவிக்கரமாகச் செயல்பட்டுள்ளார். தனது சேவை நாடுநர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வழிவகைகளை கண்டு கொள்வதில் மிகவும் பொறுப்புடனும் அக்கறையுடனும் செயற்பட்டு வந்துள்ளார். தனது சேவைநாடுநர்களின் மனதை அறிந்து தன்னால் அவர்களுக்கு ஆற்றப்படும் சேவைகளுக்குப் பிரதியுபகாரமாக எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் தனது சேவையை மனநிறைவுடன் வழங்கி வந்ததே அவரின் தனிச்சிறப்பாகும். அவர் எப்போதும் உற்சாகத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் இருப்பார். அத்தோடு தனது சேவைநாடுநர்களாலும் நண்பர்களாலும் உறவினர்களாலும் உதவியாளர்களாலும் நேசிக்கப்பட்டும் வந்துள்ளார். வேறு எவராலும் நிரப்ப முடியாத ஒரு பெரிய இடைவெளி அவரது திடீர் மறைவினால் ஏற்பட்டுள்ளது என்பதை எவராலும் நிராகரிக்க முடியாதுள்ளது. எமது நாட்டில் வாழும்  பலரும் தமது உயிர்வாழ்வுக்காக எண்ணற்ற சவால்களையும் எதிர்ப்புகளையும் எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவரது இழப்பு வேறு எவராலும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று கருதவேண்டியுள்ளது. ஒரு சட்டத்தரணி என்ற முறையில் அவரது வாழ்க்கையில் அருமையான நட்புக்கு பெருமைக்குரியனவாக இருந்தவை யாதெனில் ஒருவர் தன்னுடைய மிகச் சர்ச்சைக்குரியதும் இரகசிய பாதுகாப்புக்குரியதுமான பிரச்சினைகளில் அவர் மீது நம்பிக்கை வைத்துக் கலந்தாலோசித்து அதில் இருந்து விடுபடக் கூடிய சட்ட ரீதியான வழிமுறைகளையும் ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் உறுதியுடனும் இரகசியத்துடனும் பெற்றுக் கொள்ளலாம் என்பதாகும். இவ்வாறான இரகசிய விடயங்கள் பற்றி எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்த சூழ்நிலையிலும் வேறொருவரிடம் வெளிப்படுத்தி அதன் மூலம் நன்மை பெற அவர் எந்த முயற்சியும் எடுத்ததாக எவராலும் ஊகித்துக் கொள்ளக்கூட முடியாது. அவர் மற்றவர்களுடன் பேசும் போதெல்லாம் எப்பொழுதும் மிகவும் மிருதுவான சொற்களையே பயன்படுத்துவார். இப்பண்பான சொற்கள் ஒவ்வொருவருக்கும் அவர் மீது சௌகரியத்தையும் , அளவற்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தின.

அவர் மிகவும் துணிச்சலான பெண்மணியாவார். ஒரு தீர்மானம் எடுத்த பின் அவர் எக்காரணம் கொண்டும் அத்தீர்மானத்தில் இருந்து பின்வாங்கவோ அல்லது மாற்றம் செய்யவோ மாட்டார். அவர் தன்னுடைய புன்னகை பண்பான கருத்து  ஆழ்ந்த நம்பிக்கை  அத்துடன் மரியாதையும் பணிவும் சாமர்த்தியமும் இரக்கமும் கருணையும் போன்ற நற்பண்புகளால் இந்த உலகத்தை நாம் எல்லோரும் மனநிறைவுடன் வாழ்வதற்கு ஏற்ற ஒரு அற்புத உலகமாக்கியுள்ளதாக என்னால் துணிந்து கூற முடியும்.

இரா.நவோதயம்
சட்டத்தரணி
முன்னைநாள் உயர் நீதிமன்ற பிரதி பதிவாளர்