கௌரியின் சட்ட ஆளுமை...

கௌரியின் சட்ட ஆளுமையின் பெறுபேறுகள் உரிய முறையில் பயன்படுத்தப்பட்டனவா என்ற கேள்வி கேட்கும் காணொளியை இப்போதுதான் பார்த்தேன். அவரது வாழ்க்கை வரலாறாக அமைந்திருந்த மற்றய காணொளியை நான் ஏற்கனவே பார்த்திருந்தேன். நான் முதலாவதாகக் குறிப்பிட்டுள்ள காணொளி பல்வேறு விதமான ஆக்கபூர்வமான விமர்சனப் பார்வையை எமது கண்முன் விரித்துச் சென்றுள்ளது. இறுதியாக உலகமும் நாடும் பதில் சொல்ல வேண்டும் என்ற மிகவும் பெறுமதியான வேண்டுகோளுடன் நிறைவுற்றிருக்கிறது. இத்தகைய பெறுமதி வாய்ந்த பெரும் பெண் ஆளுமையின் திறன் ஏன் அவர் உயிருடன் இருந்தபோது வெளிக்கொணரப்படவில்லை என்ற ஆதங்கம் என் மனத்துள்ளே இப்போது எழுகின்றது. உங்களுடன் இத்துணை நெருக்கமாக இருந்த நானே அவரை நான்கு தடவைகள் மட்டுமே சந்தித்திருக்கிறேன். அதிலும் ஒரு தடவை மட்டுமே கலந்துரையாடியிருக்கிறேன். பேசவும், பழகவும், கலந்துரையாடவும் ஏன் எனக்கு வாய்ப்பு கிட்டாதிருக்கிறது என்று அவர் வாழ்ந்த காலத்திலேயே நான் பல தடவைகள் அங்கலாய்த்திருக்கிறேன். இன்று அது கிட்டாமலே போய்விட்டதே என்று உளமார வருந்துகிறேன். இவற்றுக்கெல்லாம் காரணம் அவர் தன்னை முன்நிலைப்படுத்த அதாவது, பேச்சுவழக்கில் சொல்வதாயின்- தன்னைப் பற்றித் தம்பட்டம் அடிக்க விரும்பாதமையா? அல்லது தனது கணவரின் ஒளியை அது ஏதோ ஒரு வகையில் மங்கவைத்துவிடும் என்ற அன்பு மனைவியாக ஒரு நிலைப்பாட்டை எடுத்தமையா? இவற்றில் எதுவென்று தெளிவாகத் தீர்மானிக்க முடியாதவனாக இருக்கிறேன். ஒரு ஆளுமை மிக்க பெண்மணியாக தமிழ் மக்களிடையே அவர் வெளிப்படுத்தப்பட்டு பகிரங்கமாக எமது மக்களிடையே பாராட்டப்படாதமை ஏன் என்று எனக்குப் புரியவில்லை. சிறு சிறு சமூக காரியங்களைக்கூடப் பெரிதாகப் பாராட்டி மேடைகளில் ஏற்றிக் கௌரவப்படுத்தும் எமது சமூகம் எப்படி இவருக்கு உரிய கௌரவத்தை அவர் வாழ்ந்த நாட்களில் அளிக்கவில்லை? இதுதான் எமது சமூகம் ஜடமாக வாழ்கிறது என்பதற்கான சரியான மறுமொழி. சிறையிலிருந்து மீண்டவர்கள் எப்படி வெறுமனே ஜடமாக ஆக்கப்படுகிறார்கள் என்பதனை இந்தக் காணொளி விமர்சகர் தெளிவாக விளக்குகிறார். ஆனால் உண்மை எதுவென்றால் எமது சமூகம் சிறை செல்லாவிடினும் ஜடமாக வாழப் பழகிவிட்டார்கள் என்பதே நிதர்சனம். வாழ்ந்த நாளில் அவர் பல மேன்மைகளுக்குத் தகுதியானவராக இருந்தார். அது பகிரங்கமாக வெளிப்படுத்தப் பட்டிருக்கவில்லையென்ற ஆதங்கம் எமக்கு இருந்தாலும் அதுவே உண்மை. அது பற்றி இனிமேல் நாம் வருத்தமடைவதில் பயனில்லை. அவர் சமூகத்தில் எந்தளவு மேன்மையான இடத்தில் வைத்துப் பார்க்கப்பட்டார் என்பதை அவர் இறந்த பின்பே நாம் காண்கின்றோம். அதை வாழ்ந்த காலத்தில் கண்டுகளிக்க முடியவில்லையாயினும் அவரின் ஆன்மா நிச்சயமாக அறிந்து மகிழ்ச்சியடையும் என்பதில் சந்தேகம் இல்லை. அவர் விட்டுச்சென்றுள்ள பணிகள் பல உங்கள் வருகைக்காகக் காத்திருக்கின்றன. அவரது அத்தகைய பணிகளில் பல உங்களது பணிகளுடன் சேர்ந்த ஒரு வலைப்பின்னல் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவரது பணிகளைத் தொடர்வதும், முடிப்பதும் உங்கள் கடமை. அவை உங்கள் ஆன்ம பலத்திலேயே தங்கியிருக்கின்றன. புதுப் பிறப்பொன்றை நீங்கள் எடுக்கவேண்டும். இதுவரையான உங்கள் வாழ்க்கையினின்றும் அது முற்றிலும் வேறுபட்ட- கௌரியின் ஆன்மா மெய்ச்சும் வாழ்க்கையாக அமையவேண்டும். அது உங்களுக்கும் மகிழ்ச்சிதரும், கடந்த காலம் வழிகாட்டி நிற்கும் அறவாழ்க்கையாக அமையவேண்டும். அதற்கான வல்லமையும், தென்பும், புத்துணர்வும், ஆன்மபலமும் உங்களுக்குக் கிட்டவேண்டும் என நான் உளமாரப் பிரார்த்திக்கின்றேன். இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உங்களுடன் இருக்கும்!

சு. இரத்ணவடிவேல்
இலங்கை தமிழரசுக் கட்சி
(மத்திய குழு உறுப்பினர்)