பசுமையான நினைவுகள்…
சிறு வயதில் நாங்கள் சங்கரி அக்காவை நிழல் போலப் பின் தொடர்வோம். அவரின்
செயல்கள் யாவற்றையும் அவரைப் போலவே செய்ய முற்படுவோம். தோல்வியடைவோம்
என்று தெரிந்திருந்தாலும் முயற்சி செய்வதில் எங்களுக்கும் பெரு மகிழ்ச்சி.
சங்கரியக்காவின் சிந்தனையும் வாழ்க்கைத் தத்துவமும் எனக்கு சிறு வயதில் நடந்த
ஒரு சம்பவத்தை வஜினைவூட்டுகிறது. 1976 ஆம் வருடம் மகாஜனக் கல்லூரி கவிதை
மன்றக் கூட்டத்தில் மூன்று கவிஞர்களும் (சேரன், ஆதவன், சங்கரி) கலந்து கொண்டு
ஒரு கவியரங்கம் அதன் தலைப்பு “வள்ளுவன் இன்றிருந்தால்” தலைப்பை அறிவித்ததும்
எழுந்து மூன்று நிமிடத்தில் கவி சொல்ல வேண்டும். அதில் சங்கரி தான் ஒரு வானொலி
அறிவிப்பாளராக வள்ளுவரை பேட்டி காண்பது போலவும் அவரிடம் நீங்கள் எழுதியவற்றில்
இன்றைய சூழலில் எதையாவது மாற்றி எழுத நினைக்கிறீங்களா எனக் கேட்பது போலவும்,
அதற்கு வள்ளுவர் தான் வாசுகிக்கு எழுதிய,
அடியிற்கினியாளே அன்புடையாளே
பதிசொல் தவறாத பாவாய் அடி வருடி
பின்தூங்கி முன் எழும் பேதாய்
இனிதா(அ)ய் என் தூங்கும் என் கண் இரவு
இக் கவிதையை இப்போது பலர் பெண் உரிமைகளை கட்டுப்படுத்தப் பயன்படுத்துவதாலும்,
தான் பாரதியின் இரசிகையாக பெண் உரிமைக்கு குரல் கொடுக்க அந்த வரிகளை
மாற்றியமைக்க விரும்புவதாகவும் முடித்திருந்தார்.
இது விளையும் பயிரை முளையில் தெரியும் என்பது போல அவரின் சிந்தனையைப்
பிரதிபலித்தது.
அக்கா வள்ளுவன் வழி வாழ்ந்தார் என்பதற்கு அவர் தனது கணவரை மதித்து நேசித்த
விதமும் வீட்டுக்கு வரும் மனிதர்களை விருந்தோம்பி உபசரித்த பண்பும் போதுமானது.
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கென’’ அவர்
எங்கள் எல்லோர் மனதிலும் எப்போதும் நிறைந்திருப்பார்.
கௌரி மோகன்
லண்டன்