பலரின் விடுதலைக்கு காரணமான கௌரி சங்கரி தவராசா

பயங்கரவாதத் தடைச் சட்ட வழக்குகளில் மூத்த சட்டத்தரணிகள் முன்னிலையாகப் பயந்த காலங்களில் துணிச்சலாகக் களமிறங்கி பலரின் விடுதலையை சாத்தியமாக்கியதுடன் தொடர்ந்தும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் காரணமாயிருந்தவர் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா. நாட்டில் அதிகம் பேசப்படும் பல வழக்குகளில் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா முந்நிலை ஆகியிருந்தார். தமிழ் அரசியல் கைதிகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவராகவும் மறைந்த கௌரி சங்கரி போற்றப்படுகிறார். பல வழக்குகளை எதிர்கொண்டு புகழ்பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி மட்டுமல்ல தலைசிறந்த மனித உரிமைச் செயற்பாட்டாளருமாவார். அத்துடன் தமிழ்த் தேசியத்தின் பால் அதீத பற்றுக் கொண்டவர் 1983களின் பின்னரான கால கட்டத்தில் எதுவித குற்றமும் அறியாத பல தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போது தன்னலம் கருதாது தாமாக முன்வந்து பல தமிழ் இளைஞர்களைக் காப்பாற்றியவர். நாட்டின் முக்கியமான வழக்குகளிலும் சர்வதேச அளவில் பேசப்படும் வழக்குகளிலும் கௌரி சங்கரி தவராசா முன்னிலை ஆகியிருந்தார். அதுமட்டுமல்ல எமது உதயன் பத்திரிகை நிறுவனம் மீது அதிகார வர்க்கத்தினர் திட்டமிட்டு பொய் வழக்குகள் பலவற்றைத் தாக்கல் செய்தபோது அதைச் சட்டரீதியாக எதிர்கொண்டவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவும் அவரது பாரியார் கௌரி சங்கரி தவராசாவும்தான். இச்சட்டத்தரணி தவராசா தம்பதியர் பல சவால்களுக்கு முகம் கொடுத்து நீதிமன்றங்களில் தோன்றி வழக்குகளிலிருந்து உதயம் நிறுவனம் விடுபட பேருதவி புரிந்துள்ளனர்.

 

ஈஸ்வரபாதம் சரவணபவன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
உதயம் குழுமத் தலைவர்.