ஜனநாயக முறைமையை வலுப்படுத்திய சட்ட தெய்வம்

இந்து சமயக் கலாசாரத்தின்படி கௌரி என்பவர் விநாயகப் பெருமானின் தாயாவார். அவர் பார்வதி தேவியின் வெளிப்பாடுகளில் தெய்வீக ஆற்றலைக் கொண்டவர். அவர் தனது கணவனான சிவபெருமானுக்குத் தகுதியான மனைவியாகக் கருதப்படுகிறார். அதேபோல்தான் கௌரி தவராசா அவர்களும்கூட. இப்போது அவரது ஆத்மா சொர்க்கத்தில்
இருக்கும். இந்த தேசத்தின் சட்டம் மற்றும் சமூக அரசியலில் தனது நிபுணத்துவம் மற்றும் அறிவால் தெய்வீக ஆசீர்வாதமாக இருந்தார். அடக்கு முறையை எதிர்கொள்வதில் வேறு எந்த உதவியும் இல்லாத பல ஆயிரக் கணக்கானோருக்கு வழிகாட்டி வெளிச்சமாகவும் இருந்தார். மேலும் ஜனநாயக நீரோட்டத்தில் நீதியை நிலை நிறுத்துவதற்குப் போராடியவர்களின் உயிர்த்துடிப்பாக அவர் இருந்தார். கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்த நாட்டின் அரசியல் சூழ்நிலையை மாற்றிய பல போராட்டங்களில் அவரது தைரியமும் உத்வேகமும் பெரும் சக்தியாக இருந்தன. அடக்குமுறைக்கெதிராக சமரசம் செய்துகொள்ளாமல் நிபந்தனைகளின்றியே அவர் தைரியமாக முழுப்பலத்துடனும் எழுந்து தனித்துவமாக நின்றார். ஜனநாயகப் பாசறையின் தலைவர்களுக்காக அவர் எப்போதும் குரல்கொடுத்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த அவருடைய மரபு ஒப்பற்றது. எனது தனிப்பட்ட அனுபவத்தின் படி ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் எனக்கு எதிராகச் செயற்பட்டபோது சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு தன் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் செலவளிப்பதில் அவர் முன்னணியில் இருந்தார். நீதிக்கான மக்களின் உரிமைகளை பறிக்கும் வலிமைமிக்க அதிகாரத்துக்கும் வலிமை மிக்கவர்களுக்கும் எதிராக கௌரி போராடினார், அதே வழியில் தவராசாவும் போராடினார். கண்களை மூடிக்கட்டி இருக்கும் நீதிதேவதையின் முன்னால் செல்வமும் அதிகாரமும் கண்மூடித்தனமாக மனித உரிமைகளுக்கான வெளியை தகர்க்கும் போது அவர் இனம் சித்தாந்தம் பாலினம் மதம் அல்லது மொழி என்ற எல்லாவிதமான பாகுபாடுகளுக்குமப்பால் நின்று அப்பாவிகளுக்கெதிரான சர்வாதிகாரத்தின் அழுத்தத்தினை முறியடித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு கௌரி தனது சேவைகளை வழங்கினார். கௌரியும் தவராசாவும் நீதிமன்றுக்கு உள்ளும் வெளியிலும் முன்மாதிரியாக இருந்து ஒரே நோக்கத்துக்காகப் போராடி வந்துள்ளனர். கௌரி எப்போதும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் பொறுப்புகளில் அவரது நிழலாகவும் இருந்தார். இன்று தவராசாவும் இந்த தேசமும் ஒரு சிறந்த பெண்ணை இழந்துள்ளனர் கௌரி போன்ற பெரிய மனிதர்கள் தொற்றுநோயால் நம்மை விட்டு தினமும் பிரிந்து செல்வதை நாம் காண்கிறோம். அவரது மரணம் ஏற்படுத்திய இழப்பும் வெற்றிடமும் நமது சட்ட அமைப்பிலும் ஜனநாயக நீரோட்டத்திலும் பல ஆண்டுகளாக உணரப்படும். நீதி மற்றும் நீதிக்கான எங்கள் போர்களில் கௌரி இல்லாதது உணரப்படும். அவர் ஒரு கௌரவமான நபராகவும் தோழியாகவும் மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கான எங்கள் போராட்டங்களில் ஒரு துணிச்சலான தோழியாகவும் இருந்தார் அதற்கு நாங்களே சாட்சியாளர்களாவோம்.

நீதி மற்றும் சட்டவாட்சியையும் கொள்கைகளையும் கேலி செய்ய முயற்சிக்கும் ஒரு நாட்டில், சட்டவாட்சியை நிலைநிறுத்த வாழ்நாள் முழுவதும் அதீத துணிச்சலோடும் திடத்தோடும் தைரியமும் வலிமையும் கொண்ட பெண்ணாக நீங்கள் எழுந்து நின்றீர்கள் கௌரி. மனைவியை இழந்து வாடும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்


வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன
பாராளுமன்ற உறுப்பினர்