துணிச்சல் மிக்க பெண் சட்டத்தரணியை இழந்தது தமிழ் சமூகம்

என் வாழ்வில் மிகுந்த அன்புக்கும் மதிப்புக்கும் உரியவராக அமரர்
திருமதி கௌரி சங்கரி தவராசா அவர்களிடம் எனது சட்டத்தொழிலைப்
பயில்வதற்கு எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை எனது வாழ்வில் நான்
செய்த பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். நான் அவரது கனிஷ்ட
சட்டத்தரணியாகச் சேவையாற்றிய காலத்தில் ஒரு தாய்க்கு நிகராக
அவர் என்னில் கொண்டிருந்த அன்பையும் உரிமையுடன் என்னைக்
கண்டித்த தருணங்களையும் எப்பொழுதுமே என்னால் மறக்க
முடியாது. அறிவு, ஆற்றல், துணிச்சல், அன்பு, நற்பண்பு ஆகிய
அனைத்துமே உள்ளடங்கிய ஒருவராக அவர் விளங்கினார்.
சட்டக் கல்வியை நிறைவு செய்து சட்டத் தொழில் பயிலுனர்களாக உதவி கேட்டு
வரும் அனைவருக்கும் மறுப்பு தெரிவிக்காது சந்தர்ப்பத்தை வழங்கியும் வேறு
வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தியும் கொடுக்கும் அவரது உயர்ந்த நற்பண்பு எப்பொழுதுமே
அவரின் சிறப்பைக் காட்டி நின்றது.
சட்டத்துறையில் பெரும் அநீதி இழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் அந்த அநீதிகளுக்கு
எதிராகத் துணிச்சல்மிக்க பெண் சட்டத்தரணியாக முன்னால் நின்று போராடும் அவரது
குணத்தை தற்போதும் யாருமே மறக்க மாட்டார்கள். இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக
முன்னாள் பிரதம நீதியரசர் கௌரவ திருமதி சிராணி பண்டாரநாயக்க அவர்களின்
சட்டத்துக்குப் புறம்பான முறையில் பதவி விலக்கப்பட்டமைக்கு எதிராகப் போராடிய விதம்
அவரது துணிச்சலையும் இக்கட்டிலுள்ள ஒருவருக்கு உதவி செய்யும் மனப்பாங்கையும்
எடுத்துக்காட்டியது.
விசேடமாக யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்த காலப் பகுதியிலும் அதற்குப் பின்னரும்
சிறையில் வாடிய அரசியல் கைதிகளும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுப்பு
முகாம்களில் வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் மீது மிகுந்த அக்கறை கொண்ட
ஒருவராகக் காணப்பட்டார். அவரின் வழிநடத்தலின் கீழ் பல அரசியல் கைதிகளை
பல்வேறு சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் பொலிஸ் நிலையங்களிலும்
சென்று அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அரசியல் கைதிகளின்
விடுதலைக்காக ஆயிரக் கணக்கான அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீமன்றில்
தாக்கல் செய்து அவர்களை விடுதலை செய்யும் கடைசி நாள் வரை அவர் தொழிலில்
காட்டும் அக்கறையும் வேகமும் விடாமுயற்சியும் தற்பொழுதும் எனது கண்கள் முன்
நிற்கின்றன.
வைத்தியர்கள், குருமார்கள், ஊடகவியலாளர்கள், சமூக சேவையாளர்கள் என அனைத்து
வகை தொழிலில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட பலரை துணிச்சலுடன்
நின்று வழக்காடி விடுதலை செய்த ஒரே பெண் சட்டத்தரணி இவர் தான் என்றால் அது
மிகையாகாது. தனக்கு கீழ் பணிபுரியும் அனைத்து கனிஷ்ட சட்டத்தரணிகளும் விசேடமான
அக்கறையையும் அன்பையும் கொண்டிருந்தார். அவர்களின் எதிர்காலத்துக்குத்
தேவையான உதவிகளைச் செய்யும் உயர்ந்த உள்ளம் அவரிடம் இருந்தது. தொழிலில்
இருந்த அக்கறைக்கு நிகரான அன்பையும் அக்கறையையும் தனது கணவரான
ஜனாதிபதி சட்டத்தரணி திரு தவராசா அவர்கள் மீது வைத்திருந்தார். பல சந்தர்ப்பங்களில்
பல மாதங்களாக நோய்வாய்ப்பட்டு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டிருந்த திரு தவராசா ஐயா அவர்களை வைத்தியசாலையில் அவருடன்
கூடவே இருந்து பராமரித்து அன்பு காட்டிய விதம் அவர் தனது கணவரின் மீது வைத்திருந்த
மிகையான அன்பை எடுத்துக் காட்டியது. அமரர் திருமதி கௌரி சங்கரி தவராசா அவர்கள்
இன்று எம்முடன் இல்லை என்றபோதிலும் அவர் எங்கள் அனைவரதும் உள்ளத்தில்
நிரந்தரமாகக் குடி இருக்கின்றார் என்பதுடன் அவரது நினைவுகள் எப்போதும் எமது
மனங்களில் நிலைத்திருக்கும்

ச. ஆனல்ட் பிரியந்தன்
சட்டத்தரணி