அண்ணியிடமிருந்துதான் வாழ்வைக்
கற்றுக்கொள்ள முடியும்

1981 இல் ஏற்பட்ட கலவர சூழலில் இரத்தினபுரியில் இருந்த சொத்துகள் தீ மூட்டி
எரிக்கப்பட்டதனால் அனைத்தையும் இழந்து நானும் அப்பாவும் கொழும்புக்கு வந்து
சேர்ந்தோம் அதிலிருந்து நான் சுவிட்சர்லாந்து செல்லும் வரை எனக்குப் பாதுகாப்பாகவும்
பக்க பலமாகவும் இருந்தது அண்ணன் தவாவும் அண்ணி கௌரியும்தான். மீண்டும்
1983ஆம் ஆண்டிலும் ஒரு மோசமான இனக் கலவரத்தைச் சந்திக்கும் போது நம்பிக்கை
மொத்தமாக இல்லாது போய் இருந்தது. அப்போது நம்பிக்கையும் தெம்பும் அளித்தவர் அண்ணிதான்.
பிரச்சினைகளில் துவண்டு போகாமல் பிரச்சினைகளின் போது அதிலிருந்து எப்படி மீள்வது
என்பது குறித்தே அண்ணி எப்போதும் சிந்திப்பார் என்பதை அக்கலவர சூழலில்தான்
விளங்கிக்கொள்ள முடிந்தது. எப்போதும் நேர்மறையாகச் சிந்திக்கும் அவரது பண்புதான்
மிகப் பெரிய பலமாக இருந்தது. அவர் சட்டத்தரணியாகச் செயற்பட்ட காலம் முழுவதும்
இந்தப் பண்பை மற்றவர்களிலும் விதைத்தார். மற்றவர்களுக்காக தம்மை அர்ப்பணிப்பது
எப்படி என்பதை அண்ணியிடமிருந்துதான் கற்றுக்கொள்ள முடியும். அதனால்தான்
எப்போதும் அண்ணியின் பக்கமே சாந்திருந்தேன். அவரிடமிருந்து நாம் புரிந்துகொள்ள
வேண்டிய அல்லது கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கையின் அர்த்தம் பொதிந்த
பாடங்கள் பல இருக்கின்றன. அவற்றை அண்ணி போதிக்கவில்லை வாழ்ந்து காட்டினார்.
நடைமுறையில் செயல்படுத்தி நமக்குள் பாதிப்பை உண்டு பண்ணினார். அதுதான்
அவருடைய சிறப்பம்சம்.
நாங்கள் நாட்டுக்கு வரும்போதெல்லாம் தங்கும் ஒரே இடம் அண்ணி இருக்கும்
இடந்தான். அண்ணனின் அமைதிக்கும் ஆளுமைக்கும் ஏற்ற ஆழமும் பக்குவமும்
நிறைந்த ஒரு இணையற்ற துணையாக அவர் இருந்தார். ஒருபோதும் குடும்பத்துக்குள்
அவரால் எந்தக் குழப்பமும் விளைந்ததில்லை. குடும்ப உறவுகளை அவர் அன்பினால்
கட்டிப்போட்டிருந்தார். அந்தக் கட்டு ஒரு காலமும் அவிழ்ந்துவிடவில்லை. ஏனெனில் அது
உண்மையான பாசத்தினால் போடப்பட்ட நிலையான கட்டு அதனால்தான் அண்ணியின்
பிரிவு இந்தளவுக்கு எம்மைப் பாதித்தது. அண்ணியின் பிரிவினால் விளைந்த இடைவெளி
தமிழ் சமூகத்துக்கும் சட்டத்துறைக்குள்ளும் மட்டுமல்ல எமது குடும்பத்துக்குள்ளும் இனி
நிரப்பப்படாமல் அப்படியேதான் இருக்கும்.
வேலாயுத பிள்ளை யோகராசா
மைத்துனர்
சுவிட்சர்லாந்து