அழியாத நினைவுகள்…
அவவின் கால் தொட்டு வணங்கினார்கள்
நான் ஆசை மச்சாள் என்று அழைக்கும் கௌரி சங்கரியை 1976 இல் இருந்து எனக்கு
தெரியும். நான் அவவின் மூத்த சகோதரியை திருமணம் செய்தேன். அவ நல்ல பேச்சுத்
திறனும், நடிப்புத் திறனும் கொண்ட சிறந்த மாணவியாக மகாஜனக் கல்லூரியில்
விளங்கினார். எனது மகள் கௌரி சங்கரி இந்த நாட்டில் ஒரு பெரிய சட்டத்தரணியாக
வருவார். கறுப்பு அங்கி அணிந்து நீதிமன்றத்தில் அவர் வாதாடும் அழகை இந்த நாடு
பார்க்கும் என்று அவரது தகப்பனார் என்னிடம் அடிக்கடி கூறுவார்,
அப்படியே அவர் சொன்னது பலித்தது. பிற்காலத்தில் எனது மாமனாரை நான் சந்தித்த
போது அதை நினைவூட்டினேன். அந்தத் தந்தையின் பெருமைக்கும், மகிழ்ச்சிக்கும்
அளவில்லை. என் மகள் இன்னும் பெரிய வழக்குகளில் வென்று பிரபலமாவாள். அவரை
பார்க்க நான் இருக்க மாட்டேன் நீங்கள் பார்ப்பீங்கள் என்று சொன்னார். எனது மகனை
தான் பெற்ற பிள்ளை போல பெண் பார்த்து, தனது வீட்டில் எல்லோரையும் தங்க வைத்து
சகல பொறுப்புக்களையும் ஏற்று மிகச் சிறப்பாக திருமணம் செய்து வைத்தார்.
அவர் வீட்டில் நான் தங்கியிருந்த போதெல்லாம், எனக்குப் பிடித்த உணவுகளை தான்
கையால் தானே சமைத்து அன்பாக, என் தாய் போல் பரிமாறியதை என்னால் மறக்க
முடியவில்லை. இனி என்றுமே அந்த சுவையான உணவு கிடைக்காது. நான் கொழும்பு
விமான நிலயத்தில் போய் இறங்கினால், அவருடைய செல்வாக்கில் (ஏஐP) செல்லும்
வழியாகத் தான் வெளியில் வருவேன். எனது பேரனை அழைத்துச் சென்ற பொழுது
அவருக்குத் தேவையான சகலவற்றையும் வாங்கி வைத்து அன்பு பாராட்டி எங்களை சகல
பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் அனுப்பி வைத்ததை மறக்க முடியுமா?
இந்தியாவில் அவாவையும் தவாவையும் நாங்கள் சந்தித்த போது, எங்களை
திருச்சிக்கு அழைத்து சென்றார். அங்கு ஐந்து பேர், இருபத்தைந்து முதல் நாற்பது வயது
வரையானவர்கள் அவவின் கால் தொட்டு வணங்கினார்கள். அம்மா உங்களால் உயிர்
காப்பாற்றப்பட்டு, இன்று நான்கு நட்சத்திர விடுதி நடாத்துகிறோம். நன்றாக வாழ்கிறோம்,
நீங்கள் எல்லோரும் இரண்டு நாட்கள் தங்கிப் போக வேண்டும் என்று உபசரித்தார்கள்.
அதில் ஒருவர் என்னிடம் தாங்கள் அனைவரையும் விடுவித்து தனது செலவில்
இந்தியாவில் உள்ள தனது நண்பரிடம் அனுப்பி வைத்தார், எங்களுக்கு மறுவாழ்வு தந்த
கடவுள் என்று அழுதார். அவரது மகத்தான சேவையை நினைத்து கண்ணீர் வடித்தேன்.
அவரது ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றேன்.
விக்கி அத்தான்
மொனாக்கோ, பிரான்ஸ்