சங்கரி எல்லாவற்றுக்கும் துணிந்தவள்
‘சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்ற பாரதியின் இந்த வரிகளோடு நான்
ஆரம்பிப்பதற்கு காரணம் எனது அன்பு சகோதரி கௌரி சங்கரி இன்னும் கொஞ்ச காலம்
உயிரோடு இருந்திருந்தால் இன்னும் எவ்வளவோ சாதனைகளை அவர் சாதித்திருப்பார்
என்பதே.
சிறு வயதில் நிகழ்ந்த மறக்க முடியாத நினைவுகள் இன்னும் என் மனதில் அழியாது
பதிந்திருக்கின்றன. நான் எல்லாவற்றுக்கும் பயந்தவள். சங்கரி எல்லாவற்றுக்கும்
துணிந்தவள். எங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஒரு பிரச்சனை என்றால் சங்கரி தான்
முதலில் ஓடி வந்து நிற்பாள். சங்கரிக்கு மிகவும் இனிமையான குரல்வளம். எனது மச்சான்
சிறி, மச்சான் தங்காவுடன் நாங்கள் பழைய பாடல்களைப் பாடி மகிழ்ந்த காலம் என்
மனக்கண் முன் நிற்கிறது.
என் தந்தை இறந்த பிறகு சங்கரியைப் பார்க்கும்போதெல்லாம் என் தந்தையின் ஞாபகம்
வரும். ஏனென்றால் என் தந்தையின் எல்லாவிதமான திறமைகளையும் சீதனமாகக்
கொண்டு வந்தவர்தான் சங்கரி. இவருடைய அத்தனை புகழுக்கும் பெருமைக்கும்
பக்கபலமாக நின்ற என் மைத்துனன் தவராசா பெரும் பெருமைக்கு உரியவர். கடைசியாக
என் சகோதரியுடன் நான் கதைத்த போது உமக்கு என்ன அனுப்புவது என்று கேட்டேன்.
‘எனக்கு எல்லாம் இருக்கிறது ஒன்றும் வேண்டாம் இதற்குத்தான் சகோதரங்களுடன் பிறக்க
வேண்டும் என்று சொல்லுவது’ என்று சொன்னார். அதுவே எங்கள் கடைசி உரையாடலாக
அமையும் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எங்கள் குடும்பத்திற்கு அழியாத
புகழைக் கொடுத்துவிட்டுப் போன எனது அன்பு தங்கை கௌசங்கரியை நினைக்கும்போது
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன ‘வாழ்ந்தாலும்
மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்”
இதுவரை அவர் செய்திருக்கும் சாதனைகளே அவர் புகழை என்றென்றும் நிலைபெறச்
செய்யும்.
அன்புச்சகோதரி,
கௌரிமலர் சிவசுதன்
கனடா
கௌரி: