மனித உரிமைகளுக்காக ஒலித்த குரல் மௌனித்தது

எமது இனிய நண்பரும் பிரபல ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசாவின் பாரியாரான கௌரிசங்கரி தவராசா அவர்கள் இயற்கை எய்தியமை முழு ஈழத்தமிழர்களுக்கு பேரிழப்பாகும். பயங்கரவாத தடைச் சட்டம ;அவசரகாலச்சட்டம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கில் எமது இளைஞர்கள் யுவதிகள் கைது செய்யப்பட்ட பொழுது இரவு பகல் பாராது அவர்களின் வழக்குகளை எடுத்து வாதாடுவதற்காக நேர்மையாகக் கடமையாற்றிய ஒரு சட்டத்தரணி. தமிழ்ச் சமூகம் மத்தியில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானோருக்கு வாதாடிய பிரபல சட்டத்தரணி மாத்திரமல்ல அவரது கணவர் தவராசா மற்றும் ஏனைய சட்டத்தரணிகளின் உதவியுடன் அவர்களை விடுவித்தார். பல்வேறு சிறைச்சாலைகளுக்கும் சென்று அரசியல் கைதிகளின் தேவைகளை, பிரச்சினைகளை அறிந்து வந்து அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதில் முன்நின்று உழைத்தவர். மனித உரிமைகள், பெண் விடுதலை போன்ற விடயங்களில் மாத்திரமன்றி தமிழ் மக்களின் அரசியல் விடுதலை தொடர்பாகவும் ஆழமான அறிவு கொண்டவர். அவரது கணவரின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக இருந்தவர். யாரும் எப்பொழுதும் அணுகக்கூடிய வகையில் எளிமையாக வாழ்ந்தவர். அத்தகைய ஒருவர் எம்மை விட்டு நீங்கியமை அவரது குடும்பத்துக்கு மட்டுமன்றி தமிழ் மக்களுக்கும் ஒரு இழப்பாகும். திருமதி கௌரி சங்கரி தவராசாவின் ஆத்மார்த்தமான பணிகள் என்பது தமிழ் மக்கள் மத்தியில் நீண்ட காலம் வாழும்.

 

சுரேஸ் பிரேமச்சந்திரன்,
தலைவர் – ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி