இதய அஞ்சலி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களின் அன்புப் பாரியார் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரிசங்கரியின் மறைவு தமிழர் சமுதாயத்துக்கு பெரும் இழப்பாகும். வெறுமனே ஒரு தொழில் ரீதியான சட்டத்தரணியாக இல்லாமல் பல நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்களுக்காக (சிங்களத்தின்) கோட்டையான கொழும்பில் வாழ்ந்து கொண்டு நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து துணிந்து வாதாடிக் கொண்டிருந்தவரை கொரோனா 19 என்ற கொடிய நோய் காவு கொண்டது மிகவும் வேதனைக்குரியது. குறிப்பாக, அரக்கத்தனமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டும், செய்யப்படாதுமிருந்த நூற்றுக்கணக்கானவர்களுக்காக வாதாடும் போது எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் பல வெளிவராததாகவே இருக்கும். இன வெறித்தனமாக செயற்படும் புலனாய்வுப் பிரிவினர் தாக்கல் செய்யும் வழக்குகளில் வாதாடுவது என்றால் அவர்களுக்கு எதிரான வாதாட்டங்களே அவை. இதனால் அவர்களின் எதிர்ப்பையும், வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டே செயற்பட்டார். அவரது துணிச்சலின் வெளிப்பாடே பல அரசியல் கைதிகளின் நீதிமன்ற விடுவிப்புக்கான சாதனைகள். இவரினதும் அவரது கணவரினதும் சட்ட வாதத்தினால் விடுதலை பெற்றவர்கள் ஏராளம். அவர்களுக்கெல்லாம் இவர்களே தந்தையும், தாயுமாகவும், சகோதரருமாகவும் பார்க்கப்படுகின்ற நிலையில் இன்னும் விடுதலை பெறாதவர்களுக்கான சட்ட வாதாட்டம் தேவையான தருணத்தில் திருமதி கௌரிசங்கரி எம்மை விட்டு பிரிந்தது வேதனைக்குரியது. இந்தப் பெருந்தகையின் இழப்பு அன்புக்குரிய கே.வி. தவராசா அவர்களுக்குத் தாங்கமுடியாத வேதனையைக் கொடுக்கக்கூடியதே. எனினும் ‘எம் இனத்தின் பேசமுடியாதவர்களின் குரலாக மிளிர்ந்தவர் அவரது பாரியார் என்ற மன ஆறுதல் அவருக்கு கிடைக்க வேண்டும். அமரர் கௌரிசங்கரியின் ஆத்மா ஆண்டவனின் பாதாரவிந்தத்தில் அமைதி பெற பிரார்த்திக்கின்றேன்.

சீ. வீ. கே. சிவஞானம்
அவைத்தலைவர்
வடக்கு மாகாண சபை