பெண்ணின் பெருமை, சான்றாண்மை மிக்கவர் கௌரிசங்கரி தவராசா

இலங்கையில் கொழும்பு நீதிமன்ற வளாகத்திலும், வழக்கறிஞர்கள் குழாமிலும் மதிப்பும், பெருமையும் மிக்கவராய் விளங்கிய
மூத்த வழக்கறிஞர் கௌரிசங்கரியை இழந்து விட்டோம். உயிர் பிரிந்துவிட்டது என்ற செய்தி அறிந்தவர் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. கௌரியின் அன்புக் கணவர் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தனிமைப்படுத்தப்பட்டு விட்டார் என்ற துயரம் எம்மையும் ஆழப்பாதித்து விட்டது. அதிலும் “கொரோனா” எனும் கொடிய நோய் தீவிரமாய் பரவியிருந்த காலம்  இருவரும் மருத்துவமனையில் கௌரியின் உயிர் பிரிந்த வரையும் இறுதி நிகழ்ச்சி வரையிலும் அவர்களிடம் பற்றும் பாசமும் கொண்டிருந்த நாமெல்லாம் கொழும்பு வரமுடியாத துன்பம், துயரத்தை பகிர்ந்து கொள்ளத்தான் முடிந்தது. உற்றார் உறவினரும் சட்டத்துறை நண்பர்களும் இறுதி நிகழ்வில் பங்கு கொண்டமை ஆறுதல் தான். கௌரி சட்டத்துறையில் முப்பத்தைந்து ஆண்டுகள் மேல் நீதிமன்றத்திலும் மேன் முறையீட்டு நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும், மனித உரிமை வழக்குகள் உட்பட ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்குகளை தாக்கல் செய்திருக்கிறார். வாதாடியிருக்கிறார், வெற்றி பெற்றிருக்கிறார் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். வழக்குகளில் தன்னை நாடி வருபவர்கள் இன, மத பேதமின்றி அணுகி மனித நேயத்துடன், மனிதாபிமானத்துடன் ஏற்றுக் கொண்ட வழக்குகளை நடத்தி வந்துள்ளார். பெரும்பாலும் மனித உரிமை மீறல் வழக்குகளில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் வாதாடி விடுதலை பெற்றுக் கொடுத்துள்ளார். இவ்வாறான வழக்குகளில் கட்சிகளின் தலைவர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வித்துறை மருத்துவத்துறை. ஊடகத்துறை முதலான பல துறைகளைச் சார்ந்தவர்களும் அடங்குவர். முக்கியமான வழக்குகளில். அனேகமாக அடிப்படையுரிமை வழக்குகளைக் குறிப்பிடலாம். அவற்றில் சட்ட ஆட்சி நீதித்துறைச் சுதந்திரம், ஜனநாயக அடிப்படை உரிமைகளை சுட்டிக்காட்டலாம். குறிப்பாக பிரதம நீதியரசராக இருந்த சிராணி பண்டாரநாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக குரல் கொடுத்தமையையும்  குறிப்பிடத்தக்கது. ஊடகத்துறை சார்ந்த வழக்குகள் 1998ல் வீரகேசரி மூத்த ஊடகவியலாளர் சிறீகஜன்இ 2009ல் மூத்த ஊடகவியலாளர், உதயன், சுடரொளி, காலைக்கதிர் ஆசிரியர் வித்தியாதரன், விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்றும் பல கைதுகள் ஆயுதம் வைத்திருந்தார்கள் என்போர் மீதான வழக்குகளையும் குறிப்பிடலாம். இவ் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டும், வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டும் உள்ளார்கள். 2008ல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளிலும் முன்னின்று அவர்களை விடுவிக்க வாதாடியிருக்கிறார். முன்னணி வழக்கறிஞராக விளங்கிய கௌரி தாக்கல் செய்து வாதாடிய வழக்குகளில் எல்லாம் திரு. தவராசா பேருதவியாகவிருந்திருக்கிறார். அதுபோல தவராசாவினால் நடத்தப்படும் வழக்குகளிலும் கௌரி உதவியாகவிருந்திருக்கிறார். கௌரி யாழ்ப்பாணம் எம்மூருக்கு பக்கத்திலுள்ள அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அதே போல திரு.தவராசாவும் யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பதும் பெருமையேயாகும். திரு.தவராசா இளமைக் காலங்களில் தமிழ் வாலிபர்கள் முன்னெடுத்த போராட்டங்களிலும் 1972 காலங்களில் தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களிலும் ஈடுபாடு கொண்டிருந்தவர். 1976ம் ஆண்டிலிருந்து தமிழரசுக் கட்சியிலும் தமிழர் விடுதலைக் கூட்டணியிலும், த.தே.கூட்டமைப்பிலும், 2010ம் ஆண்டு தொடக்கம் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் தலைவராக செயல்பட்டுக்கொண்டிருக்கும் திரு.தவராசாவிற்கு கௌரியும் முழு ஒத்துழைப்பு வழங்கியதை குறிப்பிடலாம். கொழும்பில் அவர்கள் இல்லத்திலேயே பல தடவைகள் தமிழரசுக்கட்சியின். செயற்குழுக் கூட்டங்களும் நடைபெற்றுள்ளன. பல சந்திப்புகளும் இடம் பெற்றன. அவ்வேளைகளில் கௌரிசங்கரி அனைவரையும் உபசரித்து உணவு வழங்கி உதவியமையை நன்கு அறிவோம். கௌரி தமிழின விடுதலை உணர்வும், ஜனநாயக வழிமுறைகளில் நம்பிக்கையும் கொண்டிருந்தார். குரலற்றவர்களின் குரலாகவும், மக்கள் மத்தியிலும், உயர் நீதிமன்றம், மேன் முறையீட்டு நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றங்களிலும் நீதியையும் சட்ட ஆட்சியையும் நிலைநாட்டுவதற்காக வாதாடி வந்துள்ளவராய் விளங்கினார். திரு.தவராசா ஜனாதிபதி சட்டத்தரணியாக விளங்கிய பெருமை கொண்டிருந்த பொழுதிலும் கௌரி சங்கரியும் அத்தகுதியும் மாண்பும் கொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.கௌரி சங்கரியும், தவராசாவும் மூத்த சட்டத்தரணிகளாக முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்விலும், சட்டத்துறையிலும் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்துள்ளனர். அவர்களின் சட்ட அறிவு, ஆளுமை, அனுபவம், அர்ப்பணிப்பு இன்னும் பல ஆண்டுகள் நாட்டுக்கும் குறிப்பாகத் தமிழ் மக்களுக்கும் பயன்பட வேண்டிய காலகட்டத்தில் திரு. தவராசா மட்டுமல்ல எம் மக்களும் சட்டத்துறையும் கூட கௌரி சங்கரியை இழந்து விட்டோமென்பதை இனி ஈடுசெய்ய முடியாத துயரத்துடன் என்றும் நன்றியுடன் நினைவு கூறுவோம்.

 

மாவை. சோ. சேனாதிராசா
தலைவர், இலங்கை தமிழ் அரசுக் கட்சி