நிபுணத்துவமிக்க சட்ட ஆளுமை சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கௌரி சங்கரி தவராசா

இலங்கையின் சட்டத்துறை வரலாற்றில் பல்லாயிரம் சட்டத்தரணிகள் தமது பணிகளை ஆற்றிச் சென்றிருக்கின்றார்கள் ஆனாலும் குறிப்பிட்ட சில சட்டத்தரணிகளே சரித்திரமாகி இன்றும் மக்களால் நினைவுகூரப்படுகின்றார்கள். அவர்கள் இந்நாட்டுக்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவையின் கனதி அத்தகையது. அதனால்தான் அவர்களின் ஒவ்வொரு நினைவும் பசுமையாக மீளமீள மக்களால் மீட்டப்படுகின்றது. சுதந்திரத்துக்குப் பிந்திய இந்நாட்டின் கடைசி ஏழு தசாப்தங்களும் அமைதியின்மையின் அடையாளமாகி இனமுரண்களைத் தோற்றுவித்து மனிதத்தை வேட்டையாடி பிரிவிணையை விதைத்து மக்களுக்கிடையே இருந்த நேசத்தைப் பிடுங்கிக்கொண்டு வெறுப்பைப் பரிசளித்து அதைப் பரிபாலிக்க வைத்த காலப்பகுதியின் உச்சகட்டத்தில்தான் கௌரிசங்களி என்ற மனிதநேயத்தின் சின்னம் செயல்படத்தொடங்குகின்றது. அவர் அன்பினதும் நேசத்தினதும் மனிநேயத்தினதும் கௌரவத்துக்குரிய அந்தஸ்துடன் தனக்கான இடத்தை ஆழமாகப் பதித்துக்கொள்கின்றார்.

1955ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி சண்முகசுந்தரம் ஜமுனாதேவி தம்பதிகளுக்குப் புதல்வியாக யாழ்ப்பாண அளவெட்டியில் பிறந்தார். புஷ்ப கௌரி, கௌரி மலர், கௌரி நாதன், கௌரி மோகன், கௌரி பிரியதர்சினி, விஜய கௌரி ஆகியோரின் சகோதரியான கௌரி சங்கரி சிறுபராயத்தில் இருந்தே ஆற்றல்மிக்கவராகத் திகழ்ந்தார். வீட்டுச் சூழலில் எப்போதும் சோராத துடிப்போடு இயங்கிக்கொண்டிருந்த கௌரி சங்கரி தனது ஆரம்ப கல்வியை அருநோதா கல்லூரியில் கற்றார். அவரது உட்சாகத்தினதும் திறமைகளினதும் பயனாக பாடசாலையில் அதிபர் ஆசிரியர்களால் பெரிதும் விரும்பப்பட்டார். பின்னர் அங்கிருந்து யாழ் மகாஜன கல்லூரிக்கு அவரை மாற்றுவதற்கு பெற்றோர் முடிவெடுத்தபோது அருநோதயா கல்லூரி அதிபர் தனது பாடசாலையில் இருந்து சங்கரியை மாற்ற வேண்டாம் என விடாப்பிடியாக நின்றார். ஆயினும் வீட்டாரின் முடிவை அவர் திருப்தியின்றி ஏற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. யாழ் மகாஜன கல்லூரிக்குச் சென்ற பின்னர் ஆற்றல்களின் தனித்துவமான அடையாளமாகவே அவர் இருந்தார். கற்றலில் மட்டுமல்லாது அவர் திறமைகாட்டிய விளையாட்டுப் போட்டிகள், இலக்கியப் போட்டிகள், பேச்சு, கவிதை, நடனம், நாடகம் சிறுகதை என்று அனைத்திலும் பரிசுகளை அள்ளிக் குவித்தார். தலைப்பைக் கொடுத்தால் போதும் உடனேயே அதற்குத் தயாராகி அளிக்கை செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்றிருந்தார்.

பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டஇளமானிப்பட்டப்படிப்பை நிவர்த்தி செய்தார். பல்கலைக்கழகத்தில் அவரது தாராள குணத்தினாலும் அன்பாலும் மற்றவர்களை அரவனைப்பதாலும் தானாக முன்வந்து உதவுவதாலும் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றவராகவே இருந்தார். அதனாலேயே அவர் அனைவராலும் மதிப்புடன் நேசிக்கப்பட்டார். சட்டக்கல்லூரியிலும் மாறாத அதே குணத்துடன் நேசத்தின் அடையாளமாகவே அவர் இருந்தார்.

கௌரி சங்கரி என்ற அன்பினதும் மனிதாபிமானத்தினதும் சின்னத்துக்கு தன்னலமற்ற சமூக அக்கறைகொண்ட சினக்கத் தெரியாத கே.வி.தவராசா என்ற மற்றுமொரு அடையாளம் கணவனாக வாய்த்தார். இவர் யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த வேலாயுதபிள்ளை (ராஜா ஸ்டோர்ஸ் – இரத்தினபுரி) செல்லம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனாவார். 1984 ஜூன் 16ஆம் திகதி இருவரதும் திருமணம் நடந்தேறியது. ஒத்த இயல்புகளையுடைய இருவரும் இணைந்த பயணம் முரண்பாடுகளைக் கடந்து சுமூகமானதாகவே இருந்தது. கேவி.தவராசா 1981ஆம் ஆண்டு சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டு இயங்கத்தொடங்கியவர். அவர் எதிர்கொண்ட முதல் வழக்கே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முதல் வழக்குதான். அப்போதிருந்தே அவர் தன் சட்டப் பாதையில் சிக்கலுக்குரிய பிரவேசத்தை அடையாளப்படுத்திக் கொண்டார். பொதுவாக இத்தகைய பாதை குடும்பத்தில் சலசலப்பை உண்டுபண்ணக் கூடியது. ஆயினும் கௌரி சங்கரி அத்தகைய சிக்கல்கள் எது குறித்தும் அலட்டிக்கொள்ளத்தக்கவராக இருக்கவில்லை. அவர் தனது கணவருக்குப் பக்கபலமாகவே இருந்தார். 1987ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி உயர் நீதிமன்றில் சட்டத்தரணியாகச் சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் கௌரிசங்கரியின் இயங்குதளம் மற்றுமொரு புதுப் பரிமாணத்தைப் பெற்றுக் கொள்கின்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டம் தமிழ் மக்களின் இருப்பை நசுக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் அவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடனும் இனவுணர்வுடனும் கே.வி.தவராசா போராடிக் கொண்டிருந்தார். அப்போது சட்டச் செயற்பாடு என்பது ஒரு போராட்டமாகவே இருந்தது என்பதுதான் உண்மை. இந்தச் சட்டப்போரில் குற்றவியல் வழக்குகளை உடைத்தெரியும் மிகப் பிரமாதமான அஸ்திரமாக இருந்தது கௌரியின் மனிதவுரிமைகள் சார்ந்த செயற்பாட்டுக் களம்தான். ஒவ்வொரு வழக்கையும் தனித்தனி யுத்தமாக தவராசா செய்துகொண்டிருக்க அவருக்கு உச்சநீதிமன்றில் இருந்தும் மேன்முறையீட்டு நீதிமன்றில் இருந்தும் பெற்றுக்கொண்ட பலமான அஸ்திரங்களால் வழக்குகளின் அடிப்படைகள் தகர்ந்துபோகும் அளவுக்கு கௌரி சங்கரி கொடுத்த அதிர்வு தவராசாவின் யுத்தகளத்தில் வெற்றிகளைக் குவித்தது. கிருஷ்னரும் அர்ஜூனனும் போன்றதொரு போர்க்களச் செயற்பாட்டாளர்களாக பிரித்தறியமுடியாதளவுக்கு இணைந்த ஒரு ஆகர்சம் இருவரதும் செயற்பாட்டுத்தளத்தில் பிணைந்திருந்தது.

மரண தண்டனைக்கெதிரான 11 அடிப்படை மனிதவுரிமை வழக்குகளை அவர் தனியாகத் தாக்கல் செய்திருந்தார். அதுபோலவே கொரோனா-கொவிட்19 தாக்கத்தால் மரணித்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கெதிராக சமய நம்பிக்கையின் அடிப்படையில் தமது அடிப்படை மனித உரிமை பாதிக்கப்படுவதாக அவதிப்பட்டவர்களின் சார்பில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி கோரிய 12 அடிப்படை மனிதவுரிமை மீறல் வழக்குகளையும் தாக்கல் செய்திருந்தார். கொரோனாவால் இறந்தவர்கள் எரிக்கப்படுவதை அரசியலாக்கி அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்ட அரசியல் அழுத்தத்துக்கு எதிராக அவர் அடக்கம் செய்யப்படுவதை ஆதரித்து சட்டரீதியில் அசராது நின்றார். இத்தனைக்கும் கௌரி சங்கரி தனது சமய நம்பிக்கைப்படி எரிக்கப்படுவதை ஏற்றுக் கொண்டவர். அந்த இக்கட்டான நிலையில் மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆட்பட்டு நின்ற முஸ்லிம் சமுதாயத்துக்கு ஆறுதலாக கௌரி சங்கரி தென்பட்டார்.

சிரேஷ்ட சட்டத்தரணி

கௌரி சங்கரியின் இத்தனை வருட கால சட்டப் போராட்டத்தில் அதிக கவனயீர்ப்பைப்பெற்ற சில வழக்குகள் குறித்த சுருக்கமான பதிவுகளை மேலோட்டமாகப் பட்டியல் படுத்தினால் கூட மலைப்பாக இருக்கும்.

01. பிரதம நீதியரசராக இருந்த போது பதவி பறிக்கப்பட்டு சிராணி பண்டார நாயக்க அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டு நீதித்துறையின் சுயாதிபத்தியம் கேள்விக்குட்படுத்தப்பட்டபோது அதற்கெதிராக வீறுகொண்டெழுந்து நீதித்துறையின் சுயாதீனத்தை நிலைநிறுத்த முன்னெடுக்கப்பட்ட சட்டப்போராட்டத்தில் இறுதி வரையும் கௌரி சங்கரி தவராசா முன் அணியில் அச்சமற்று அதிகாரத்துக்குச் சவாலாக நின்றார்.

02. கல்வியைத் தனியார் மயப்படுத்தி முன்னெடுக்கப்பட்ட சைட்டம் (ளுயுஐவுஆ) பல்கலைக்கழக விவகாரத்தில் தீர்வினைப் பெற்றுக்கொள்ள கௌரி சங்கரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு வழிகோலியது. இலங்கையின் இலவசக் கல்வி வரலாற்றில் ஏற்பட இருந்த பாரிய அபாயங்களைத் தடுக்க இந்த முயற்சி மிகவும் உறுதுணையாக இருந்தது.

03. மரண தண்டனை அமுலாவதை இடை நிறுத்தக்கோரி 11 அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.

04. கொவிட் 19 தாக்கத்தால் மரணிப்போரின் சடலங்களை கட்டாய தகனத்துக்கு உட்படுத்துவதை ஆட்சேபித்தும் அவற்றை நல்லடக்கம் செய்யவும் அனுமதியளிக்கக் கோரி 12அடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார்.

05. அரசியலமைப்பின் 20 ஆம் திருத்த சட்ட மூலத்துக்கு எதிராக 4 விஷேட மனுக்களை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்தார். நம் நாட்டின் எதிர்கால அரசியல் ஸ்திரப்பாட்டில் 20ஆம் திருத்தச் சட்டமூலம் ஏற்படுத்தப் போகும் சிக்கல்களையும் அதிகாரப் பிரச்சினையையும் எச்சரிப்பதாக அந்த மனுக்கள் அமைந்திருந்தன.

06. இலங்கை வரலாற்றில் எப்போதாவது மிக நியாயமாகச் செயற்படுகின்ற அதிகாரிகள் பொறுப்பான பதவிகளில் அமர்வார்கள். அப்படிப்பட்ட ஒருவர்தான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான இலங்கையின் முன்னணிக் குற்றப் புலனாய்வாளர் ஷானி அபேசேகர, ஆட்சி மாற்றத்தின் பின்னர் கைது செய்யப்பட்டபின்னர் அவருக்குப் பிணைப் பெற்றுக்கொள்ள மேன் முறையீட்டு நீதிமன்றிலும் அவரது அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உயர் நீதிமன்றிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் மேன் முறையீட்டு நீதிமன்றம், பிணை தொடர்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பொன்றினை அளித்து, பிணையும் வழங்கியிருந்தது.

07. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டமையை ஆட்சேபித்து அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

08. சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பபட்டு தடுத்து ரைக்கப்பட்டிருந்தமையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். அதே வேளை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை ஓர் அரசியல் கைதியாக சர்வதேச மன்னிப்புச் சபை பிரகடனம் செய்துள்ளது.

09. உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு தொடர்பு படுத்தப்பட்டுக் கைது கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன், முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி உட்பட்டவர்கள் சார்பில் தானே மனுதாரராகக் கையொப்பமிட்டு உயர் நீதிமன்றில் மனுக்களைத் தாக்கல் செய்தார். 2019 ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமது வாக்காளர்களைத் திருப்திப்படுத்த அரசாங்கம் பல்வேறு விடயங்களைச் செய்ய வேண்டி இருந்தது. முஸ்லிம் அரசியல் வாதிகளையும் மற்றும் பலரையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ஊடாகவே இலக்கு வைக்கப்பட்டது. இந்நிலையில் இவர்கள் மீதான வெறுப்பு நாடளாவிய ரீதியில் அரசியல்மயப்பட்டபோது அவர்களுக்காக யாரும் முன்வரத் தயங்கி நின்ற போதுதான் கௌரி சங்கரி சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து நீதியை நிலைநாட்ட அபாயகரமான நிலையிலும் தன்னையே மனுதாரராக்கிக் கொண்டது சாதாரணமான விடயமல்ல.

10. தனியார் ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு தீர்வு தேடி சுதந்திர வர்த்தக வலைய ஊழியர்களினால் 30-05-2011 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிசாரும் இராணுவத்தினரும் மேற்கொண்ட கொடூரமான தாக்குதலினால் படுகாயமடைந்த 14 ஊழியர்களின் சார்பாக கௌரி சங்கரி தவராசாவே மனித உரிமை வழக்குகளைத் தாக்கல் செய்தார்.

11. 1997இல் இடம்பெற்ற கொழும்பு கலதாரி ஹோட்டல் குண்டுவெடிப்பில் கந்தசாமி பற்குணராசா என்பவர் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டார். ஆனாலும் பொலிசார் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு முன்னரே மிக விரைவாக உயர் நீதிமன்றில் கௌரிசங்கரி தவராசா அடிப்படை மனித உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்தமை கந்தசாமி பற்குணராசா நீதிமன்றினால் 2004இல் விடுதலை செய்யப்பட முக்கிய காரணமாக அமைந்தது.

12. வீரகேசரி நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் சிறிகஜன் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயல்படுவதாக சந்தேகத்தில் 1998 ஆகஸ்ட்; மாதம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். ஆயினும் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட எந்தவொரு குற்றச்சாட்டையும் அரச தரப்பால் நிரூபிக்க முடியாமல் போனதன் காரணமாக 1999 ஆம் ஆண்டு நீதிமன்றால் விடுதலை செய்யப்படக் காரணமாக அமைந்ததும் அவருக்காகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல்மனுதான்.

13. மௌபிம பத்திரிகையின் ஊடகவியலாளரான ; பரமேஸ்வரியும் 10 கிலோ எடையுள்ள தற்கொலை வெடிகுண்டை உடமையில் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சுசந்திகாவும்; 2006 இல் விடுதலை செய்யப்பட்டனர்;.

14. ‘ஈகுவாலிட்டி’ நிறுவனத்தின் உரிமையாளரும் நன்கு அறியப்பட்ட பத்திரிகை வெளியீட்டாளரும் ஊடகவியலாளருமான வடிவேலு யசிகரனும் சக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளரான வளர்மதியும்; கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது 2008 இல் குற்றமற்றவர்களென விடுதலை செய்யப்பட்டார்கள்.

15. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையேயான இறுதி யுத்தத்தில் 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புலிகளின் இலகுரக விமானங்கள் இரண்டு கொழும்பிலும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகாமையிலும் தாக்குதல் நடாத்தின. இத்தாக்குதலோடு தொடர்புண்டு என்ற சந்தேகத்தில் உதயன், சுடரொளி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் தற்போதைய காலைக் கதிரின் பிரதம ஆசிரியருமான வித்தியாதரன் 2009 பெப்ரவரியில் கைதுசெய்யப்பட்டார். இருந்த போதிலும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுகளை அரச தரப்பால் நிரூபிக்க முடியாமல் போனது. இறுதியில் நிரபராதியாக அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஊடகத்துறையைச் சார்ந்த பல்வேறு ஊடகவியலாளர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டாலுங்கூட அவர்களை அநியாயமாகத் தண்டிப்பதற்கு அரசாங்கத்தால் முடியவில்லை. காரணம் அவர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் களத்தில் இருப்பார். அவருடன் இணைந்து கௌரிசங்கரி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் எப்போதும் ஆர்வங்கொண்டிருந்தார்.

16. பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவானந்தன் கிசோர் செஞ்சிலுவை சங்க உத்தியோகத்தராக கடமையாற்றியபோது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாக 1999 ஆம் ஆண்டு சித்திரை மாதம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டாலும் 2000 ஆம் ஆண்டு மே மாதம் விடுதலை செய்யப்படவேண்டிய சட்ட அழுத்தத்தை கௌரி சங்கரி கொடுத்திருந்தார்.

17. அரசாங்கத்தின் மின் விநியோகத் திட்டத்தைச் சிதைப்பதற்கு நாடாளாவிய ரீதியில் மின்மாற்றிகள் மீது விடுதலைப்புலிகளால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தத் தாக்குதலில் ஈடுபடுகின்ற தாக்குதல்தாரிகளைக் கண்டுபிடிக்கமுடியாத பாதுகாப்புத்துறை சாதாரண மக்களை இலக்கு வைக்கத் தொடங்கியது. அந்தவகையில் 2001 ஆம் ஆண்டு மின்மாற்றிகள் சேதப்படுத்தப்பட்டதாகத் செல்வராசா காந்தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து ஐந்தாண்டுகளின் பின்னர் களுத்துறை மேல் நீதிமன்றால் 2006 இல் செல்வராசா காந்தன் விடுதலை செய்யப்பட்டார்.

18. விடுதலைப் புலிகளின் மருத்துவப்பிரிவில் மருத்துவ தாதியாகச் செயற்பட்டு டென்மார்க் சென்று புலிகளுக்கு நிதி சேகரித்ததாகக் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த டென்மார்க் கல்லூரி மாணவி சித்திரா மீதான வழக்கு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் 1996ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அவரை மீண்டும் டென்மார்க் குடியுரிமை வழங்கி அழைத்துக் கொண்டது. இந்தச் சம்வத்தை பதிவு செய்ய இலங்கை வந்திருந்த டென்மார்க் ஊடகவியலாளர்கள் நால்வர் பாதுகாப்புத்தரப்பால் தடுத்து வைக்கப்பட்டாலும் கௌரி சங்கரியும் கே.வி.தவராசாவும் இணைந்து மேற்கொண்ட சட்ட நடவடிக்கைகளால் அவர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டார்கள். டென்மார்க் கல்லூரி மாணவி சித்திரா நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் டென்மார்க் பயணமாகும்வரை தவராசா கௌரி சங்கரி தம்பதியரின் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

19. ஜோன் என்ற பெண் தனது மகனைத் தேடி ஐரிசில் இருந்து இலங்கை வந்த போது 1996 இல் விடுதலைப் புலிகளின் உளவாளி என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இவரது வழக்கு முடியும் வரை தவராசா கௌரி சங்கரி தம்பதியரின் வீட்டிலேயே தங்கியிருந்தார். வழக்கு வெற்றிபெற தனது மகனுடன் மீண்டும் ஐரிஸ் திரும்பினார்.

20. மட்டக்களப்புப் போரதீவிலிருந்து கொழும்பில் தாக்குதல் நடாத்துவதற்காக ஆயுதங்களுடனும் வெடி வெடிபொருட்களுடனும்; வந்ததாக 2004இல் கைது செய்யப்பட்ட கங்காதரன் 2013 இல் விடுதலையானார்.

21. யாழ்ப்பாண பிரதான பொலிஸ் அத்தியட்சகர்; திரு. சால்ஸ் விஜயவர்தன யாழ் இணுவிலில் வைத்து 2005 ஒகஸ்ட் 4 இல் விடுதலைப் புலிகளினால் கடத்திச் செல்லப்பட்டு மல்லாகத்தில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் யாரையும் கைது செய்ய முடியாத பாதுகாப்புத்தரப்பு கோபி என்றும் வீரபாண்டியன் என்றும் அழைக்கப்படும் கதிரமலை வைதீகனை கைது செய்து நீதிமன்றில் முந்நிலைப்படுத்தினாலும் அவர் நிரபராதியாக 2006 இல் விடுதலை செய்யப்பட்டார்.

22. வெளிநாட்டு நாணய மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் வர்த்தகர் வின்சேந்திரராஜன் அரசதரப்பால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் 1999ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

23. விடுதலைப் புலிகளுக்கு கடற்படையின் இரகசிய தகவல்களை வழங்கியதாக கடற்படை வீரர் நவாப்தீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளிலிருந்தும் 14 வருடங்களுக்குப் பின்னர்; 2014 இல் விடுதலை செய்யப்பட பிரதான காரணம் அவரது வழக்கு உரிய முறையில் கௌரி சங்கரியாலும் தவராசாவாலும் நகர்த்தப்பட்டமையாகும். நீதிக்காக அவர் 14 வருடங்கள் காத்திருக்க வேண்டி ஏற்பட்டது.

24. தற்கொலை அங்கிகள், பிஸ்டல் 02, கைக்குண்டு 2 உட்பட்ட வெடிபொருட்களை கொழும்பு 12 கதிரேசன் கோவிலில் மறைத்து வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட தர்மகர்த்தா வீரசுப்பிரமணியத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்; 2000 ஆம் ஆண்டு விடுதலையானார்.

25. சுவிஸ்; பிரஜையும் பேர்ன் மாநிலத்தில் ‘தாய் வீடு’ பணமாற்று நிறுவனத்தின் உரிமையாளருமான நடராஜா கருணாகரன் புலிகளுக்கு நிதி உதவி வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசதரப்பு சமர்ப்பித்த குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தையும் சாட்சியங்களையும் நிராகரித்த மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய வழக்கிலிருந்து நடராஜா கருணாகரனை விடுதலை செய்தார்.

26. விடுதலைப் புலிகள் அமைப்பில் 1991 இல் இணைந்து, தமிழீழ விடுதலைக் கடற்; புலிகளின் மகளிர் பிரிவின் ஒரு தலைவியாகப் பணியாற்றிய பகிரதி முருகேசு 1998 ஆம் ஆண்டு பிரான்ஸ_க்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், சுகவீனம் அடைந்திருந்த தனது தாயாரைப் பார்ப்பதற்காக இலங்கை வந்து மீண்டும் பிரான்ஸ்; செல்வதற்காக 2015 மார்ச் 2ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு தனது ஒன்பது வயது மகளுடன் வந்திருந்த போது பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டாலும் உரிய சட்ட நடவடிக்கைகளின் காரணமாக 2016 ஆம் ஆண்டு வைகாசி மாதம் விடுதலை செய்யப்பட்டார்.

27. பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய கொலை முயற்சி வழக்கில் 2006 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பிரித்தானியப் பிரஜையான ரவிகுமார், கோட்டாபயவைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி தற்கொலை குண்டுதாரிக்கு முச்சக்கர வண்டியைக் கொள்வனவு செய்ய நிதி வழங்கியதான குற்றச்சாட்டிலிருந்து ஐந்து வருட விசாரணையின் பின்னர் 2011 ஆம் ஆண்டு விடுதலையானார்.

28. 2006 இல் கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரவிராஜ் கொலை தொடர்பான நீதவான் நீதிமன்ற வழக்கிலும் 2016இல் சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் பாதிக்கப்பட்ட இரவிராஜ் குடும்பத்தின் சார்பில் கே.வி. தவராசா முந்நிலையாக வழக்கை நெறிப்படுத்தும் பொறுப்பை முழுமையாகச் சுமந்தவர் கௌரி சங்கரிதான்.

29. 2006லும் 2008லும் ஜேர்மனியிலும் அவுஸ்திரேலியாவிலும் பொங்கு தமிழ் எழுச்சிப் பேரணியில் கூடியிருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் ஈழத்தைப் பெறப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பொங்கு தமிழ் நிகழ்வில் உரையாற்றியதாக ஜெயானந்தமூர்த்தி, ப.அரியநேத்திரன், எஸ்.கஜேந்திரன், சிவாஜிலிங்கம் ஆகிய த.தே.கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமெதிராக பொலிஸ் மாஅதிபர் குற்றப்புலனாய்வுத்துறைக்கு முறைப்பாடு செய்ததையடுத்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர்

30. விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மானின் வேண்டுகோளுக்கு இணங்க விடுதலைப்புலி அங்கத்தவர்களுக்கு தெஹிவள செலான் வங்கிக் கிளையில் வங்கிக்கணக்குகளைத் திறந்து கொடுத்து புலிகளின் நிதிப்பறிமாற்றத்துக்கு ஒத்தாசை நல்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு 2010இல் கைது செய்யபட்ட தெகிவளை செலான் வங்கி முகாமையாளர் இரண்டாண்டுகளின் பின்னர் விடுதலையானார்.

31. மொரட்டுவைப் பல்கலைக்கழக மாணவன் தாமோதரம் பிள்ளை சயந்தன் ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் தற்கொலை அங்கியையும் உடமையில் வைத்திருந்தமைக்கு உதவி ஒத்தாசை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு 2009இல் கைது செய்யப்பட்ட சயன்தனின் தாய்க்கும் தங்கைக்கும் எதிராகக் கொழும்பு நீதிமன்றில்; தாக்கல் செய்யப்பட்ட வழக்கு. 2012இல் விடுதலை.

32. இலங்கை குடியரசின் இராணுவத்துடன் சேர்ந்து கடமையாற்றிய கருணா அணியின் உறுப்பினர்களான தங்கராஜா தப்பரமூர்த்தி, செங்குராஜா நல்லையா, குகராஜா, ராஜா ராசவேலி ஆகியோரைக் கொலை செய்வதற்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்கியதாக 2010ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட கணே~ரத்னம் சாந்ததேவன் யாழ் மாநகரசபை உறுப்பினர் முருகையா கோமகன் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து வழக்குகளிலிருந்தும் 2017இல் விடுதலை செய்யப்பட்டனர்.

33. புலனாய்வுத்துறை அதிகாரி சுனில் தாப்ரு தெகிவளை பொலிஸ் விடுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு மிகுந்த இடர்களைச் சந்தித்த ஒன்றாகும். உண்மைகள் கண்முன்னே இருக்கும் போது சட்டத்தை பொய்மையின் பக்கம் அழைத்துச் செல்ல முயன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இடையராது போராடிய ஒரு முக்கியமான வழக்குமாகும். (2003- 2018).

34. பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி வழக்கில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராகிய பசீர் வாலி முஹம்மத் என்பவரைக் கொலை செய்ய சதித்திட்டம்தீட்டி 2006 ஒகஸ்ட் 14 ஆந் திகதி குண்டுத் தாக்குதல் நடாத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட கனகரத்தினம் ஆதித்தன் மற்றும் இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. கனகரத்தினம் ஆதித்தனால் வழங்கப்பட்ட அரச சான்றாக மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் நிராகரிக்கப்பட பிரதான காரணமே கௌரி சங்கரியின் நுணுக்கமான சட்டநகர்வுதான்.

35. கொழும்பு செட்டியார்தெரு நகைக்கடை உரிமையாளர்; சிவானந்தம் 2010 இல் கைது செய்யப்பட்டாலும் அவருக்கெதிரான வழக்கைக் கொண்டுநடாத்த முடியாதளவுக்கு அரசதரப்ப தள்ளப்பட இறுதியில் சிவானந்தம் விடுதலை செய்யப்பட்டார்.

36. வத்தளை எலகந்தையில் அமைந்துள்ள மின்மாற்றி நிலையத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெரிய சதித் திட்டடியதோடு கொழும்புலிருந்து கட்டுநாயக்க செல்லும் புகையிரதத்தினை வெடி குண்டு வைத்துத் தகர்க்கச் சதித் திட்டம் தீட்டியதோடு கடும்சேதம் விளைவிக்கக் கூடிய குண்டுகளை உடமையில் வைத்திருந்ததாக 2008இல் கைது செய்யப்பட்டு கொழும்பில் மூன்று வழக்குகளும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளும் தாக்கல்செய்யப்பட்டு குற்றவாளியாகக் கொண்டு போய் நிறுத்தப்பட்ட ஜெயராம் இராமநாதனுக்கு எதிரான ஏழு வழக்குகளில் இருந்தும் 2019 இல் அவர் விடுதலை பெற ஒரு நீண்ட சட்ட யுத்தமே செய்யவேண்டி இருந்தது.

37. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளரான வேலமாலிதன், செயலாளர் பொன்னம்பலம் லட்சுமி காந்தன் ஆகியோர் 2013 ஜனவரி 12ஆம் திகதி பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, மாவட்டக்கிளைக் காரியாலயத்தில வெடிபொருட்களை வைத்திருந்ததாக் குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டாலும் அவர்கள் நிரபராதிகளாக விடுதலையாகினர்.

38. இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பாரமி குலதுங்கவையும் மேஜர் துவான் நிசாம் முத்தலிபையும் 2005ம் ஆண்டு குண்டுவைத்து கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக 2006இல் கைது செய்யப்பட்ட வாசுகோபாலுக்கு எதிராக சட்டமா அதிபரினால் 2009ஆம் ஆண்டு கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோதும் இரண்டு வழக்குக்களில் இருந்தும் 2017இல்; விடுதலை செய்யப்பட்டார்.

39. 2009 ஆண்டு சுதந்திர தின விழாவிலும் தியத்தலாவ இராணுவ முகாமிலும் மகிந்த ராஜபக்ச. கோட்டாபய ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகிய பிரமுகர்களைக் கொலை செய்யச் சதித்திட்டம்தீட்டி கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினத்தின் மகன் ஆதித்தியன் பத்தாண்டுகளின் பின் விடுதலையானார்.

40. வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் 2005 ஒகஸ்ட் 12ஆம் திகதி இரவு 10.45 மணிக்கு சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் இசிதோர் ஆரோக்கியநாதன் 2005இல் கைதுசெய்யபட்டு பதின்மூன்று வருடங்களின் பின்னர் நீதிமன்றால் 2018இல் விடுதலை செய்யப்பட்டார்.

41. ஐந்து மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் 2008 இல் கடற்படையினரால் கடத்தப்பட்டு திருகோணமலையில் அமைந்துள்ள சித்திரவதை முகாமில் தடுத்து வைத்து கப்பம் கோரப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு விசாரணையில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகின. திருகோணமலையில் அமைந்துள்ள சித்திரவதை முகாம், முல்லைதீவில் இயங்கிய கோட்டாபய சித்திரவதை முகாம் ஆகியவற்றின் தகவல்கள் பகிரங்கமாகின. குற்றப்புலனாய்வுத் திணைக்களக்கின் பணிப்பாளர் சானி அபேசேகர, பொறுப்பதிகாரி நிசாந்த சில்வா போன்றவர்கள் மிக நியாயமான முறையில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேல் நீதிமன்றில் இவ்வழக்கு ட்ரைல் அட் பார் முறையில் இடம்பெற்று வருகின்றது.

42. 2018 ஆடி 2ஆம் திகதி யாழ்ப்;பாணம் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற அரச வைபவத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையில் முரண்பாட்டைக் கொண்டுவரும் விதத்தில தண்டனைச்சட்டக் கோவை பிரிவு 120ன் படி தண்டனை வழங்கக் கூடிய குற்றத்தை புரிந்துள்ளார் என பொலிசாரால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அன்றைய தினமே இராஜாங்க அமைச்சர் பிணையில் விடுதலையானார்.

43. கொள்ளுபிடிய பித்தளை சந்தியில் 2006மு; ஆண்டு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய கொலைமுயற்சி வழக்கில் கைதுசெய்யப்பட்ட புற்றுநோயாளியான சந்திரபோஸ் செல்வச்சந்திரன் 12 வருட விசாரணையின் பின்னர் 2019 இல் விடுதலை பெற்றார்.

கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக இடம்பெற்ற நீதிக்கான இந்தச் சட்டப்போரில் எந்த இடத்திலும் கௌரி தோற்றுப் போகவில்லை. ஆயிரத்திற்கு மேற்;பட்ட அடிப்படைமனித உரிமை மனுக்களையும் பல நூற்றுக்கணக்கான ஆட்கொணர்வு மனுக்களையும் தாக்கல் செய்து நீதிக்கான பாதையை விசாலப்படுத்தினார். எல்லாப் பக்கங்களிலிருந்தும் கிளம்பிய அனைத்து அச்சுறுத்தல்களையும் தாண்டி அவரது முயற்சியில் மிகத் தெளிவோடு பயணித்தார். இன,மத,மொழி பேதங் கடந்து மனிதம் என்ற பொதுத்தளத்தில் தனது இருப்பை நிலைப்படுத்தினார். சட்டவிரோதத் தடுத்து வைப்பு முறையற்ற கைது என்று அனைத்துக்கெதிராகவும் அவர் முறையான சட்டத் தாக்குதலைச் செய்தார். அதனால் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிபர்கள், சுங்கத் திணைக்கள அதிகாரிகள், மருத்துவர்கள், உயர்மட்ட அரச நிருவாகிகள், வங்கி முகாமையாளர்கள் என்று தொடங்கி கோவில் தர்மகர்த்தாக்கள், பாடசாலை அதிபர்கள், ஊடவியலாளர்கள், கிராம சேவகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என்று அந்தத் தளம் விரிந்து தமிழ்ப் போராளிகள், பொலிஸ் அதிகாரிகள், கடற்படையினர் போன்றவர்கள் உட்பட சாதாரண பொதுமக்கள் வரைப் பயனடைந்தார்கள். சட்டத்துறைச் செயற்பாட்டாளர்கள் தொடக்கம் முக்கியமான அதிகாரிகள் அரச இயந்திரத்தால் பழிதீர்க்கப்பட சட்டம் முறையற்ற விதத்தில் பாவிக்கப்பட்டால் அதற்கெதிரான முறையான சட்டப்பிரயோகத்தின் பாதையில் கௌரி சங்கரி முதலாவது அணியில் முன்னிற்பார்.

அரச இயந்திரத்தின் பழிதீர்க்கும் படலத்தில் பாதிக்கப்பட்டு நீதிக்காக கௌரியின் அலுவலகத்தை நாடும் ஒருவர் அவரின் முதல் வார்த்தையில் தனக்கு நீதி கிடைத்துவிட்ட திருப்தியை உணரமுடியும். அப்படித்தான் அபாயகரமான பல வழக்குகளில் அவர் முந்நிலையாகினார். அதை விட மிகவும் ஆபத்தானது அதிகாரத்துக்கு எதிராகக் களமிறங்கி தன்னையே மனுதாரராக்கிக்கொண்டு கையொப்பமிட்டு எதைப்பற்றியும் கொஞ்சமும் அச்சப்படாமலும் அலட்டிக்கொள்ளாமலும் நீதியை இலக்கு வைத்து அவர் பயணப்படுவதாகும். நீதிமன்ற வளாகத்தில் அனைவரும் இன்றுவரையும் அவரை ஆச்சரியத்துடன் பார்ப்பதற்கும் அவர் குறித்து விதந்து கூறுவதற்கும் பிரதானமான காரணமாக அமைந்தது அவரது இந்த அசட்டுத் துணிச்சல்தான். நமக்கு எதற்கு வீண் வம்பு என்று ஒதுங்கிச் செல்லும் பலருக்கு மத்தியில் கௌரி சங்கரி புயலாகி நின்றார். அநீதியை அடித்து நொறுக்கும் அப்பண்பு அவருக்கு இயல்பானது எனவேதான் அவர் எப்போதும் இயல்பாகவே இருந்தார். அவர் கோபப்பட்டு யாரும் பார்த்திருக்கவாய்ப்பில்லை ஏனெனில் அவர் கோபப்பட்டால் அதை நிச்சயம் யாராலும் எதிர்கொண்டிருக்க முடியாது. அதனால்தான் எல்லாவற்றுக்கும் புன்னகையைப் பயன்படுத்தினார். அந்தப் புன்னகை மிகவும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கும்.

என்றும் நிரப்பப்படாத இடைவெளியை இந்நாட்டின் சட்டத்துறைச் செயற்களத்தில் ஏற்படுத்திவிட்டு 2021 ஆகஸ்ட் 23ஆம் திகதி எம் எல்லாரிடமிருந்தம் விடைபெற்றுக் கொண்டார். கொரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் போதும் கூட தன்னிடம் சட்ட உதவி நாடி வந்தவர்களை நிராசையாகச் செல்லவிடவில்லை. கடைசி நிமிடம் வரை அவர் அவர்களுக்காகக் களத்தில் இருந்தார். மற்றவர்களுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணிக்கின்ற மனிதத்தின் அன்புருவாகவே அவர் என்றும் எம் நினைவுகளில் நிலைத்திருப்பார்.

தர்மராஜா தர்மஜா
கனிஷ்ட சட்டத்தரணி