1955 - 2021

மனவலிமையால் தவராசாவும் கௌரிசங்கரியும் உறுதிபெற்று உயர்ந்தே இருக்கின்றனர்.

கௌரி சங்கரி என்ற மிகச் சிறந்த மனித நேயமுள்ள சட்ட ஆளுமையை இழந்திருக்கும் பொழுதொன்றில் இந்நூலுக்கு அணிந்துரை எழுதுகின்றேன். கௌரி சங்கரியும் கே.வி. தவராசாவும் எனக்குத் தூரமானவர்கள் கிடையாது. சட்டத்துறை சார்ந்தவர்கள் என்பதால் எமக்கிடையே இருந்த நெருக்கம் இக்குறிப்பை மன நெகிழ்ச்சியோடு எழுத வைக்கின்றது.

இந்நூலை ஆழமாக வாசிக்கின்ற போது எனக்கேற்பட்ட ஒரேயொரு உணர்வு “சட்டத்தரணிகளாக இருந்து கொண்டே தனது மக்களுக்காக இத்தனை தைரியமாகக் களத்தில் நின்று எல்லாச் சவால்களையும் எதிர்கொள்ளும் திறன் எத்தனை பேருக்கு இருக்கும் என்பதுதான்.” என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்த முக்கியமான விடயமும் அதுதான். சட்ட ரீதியில் ஒரு வழக்கை எதிர்கொள்ளுதல் என்பது பொதுவானது. முழுக்க முழுக்க மனிதாபிமானத்தோடும் கருணையோடும் காருண்யத்தோடும் எப்போதுமே இயங்குதல் என்பது சாதாரணமானதல்ல தவராசாவும் கௌரி சங்கரியும் இந்த விடயத்தில் ஒருவர்க்கொருவர் சளைத்தவர்களே அல்ல. ஒத்த இயல்புடைய இருவர் எப்படியெல்லாம் முரண்களேயில்லாமல் ஒருமித்துப் பயணிக்க முடியும் என்பதற்கு இவர்கள் இருவரும் நமக்கு முன்னால் இருக்கின்ற நடைமுறை உதாரணம் என்றே சொல்ல முடியும்… Seemore>

 

GOWRY SHANGARY THAVARASHA MEMORIAL SONG

கௌரி: நீதிக்கான குரல்
- புத்தக வடிவத்தில்பதிப்புரை -

எமது பதிப்பகத்தின் 18வது வெளியீடு இந்நூல். ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் முதலாவது படைப்பாக்கம். இந்நூல் மூன்று முக்கிய விடயதானங்களைக் கொண்டிருக்கின்றது. முதலாவது மறைந்த சிரேஸ்ட சட்டத்தரணி அமரர் கௌரி சங்கரி தவராசாவின் நினைவுகளைச் சுமந்திருக்கின்றது. இரண்டாவது பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றிய தெளிவைப் பதிவு செய்திருக்கின்றது. மூன்றாவது இந்நாட்டில் பேசு பொருளாக இருந்த, இருக்கின்ற மிக முக்கியமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்குகள் பற்றிய பதிவுகள் போன்றனவே இந்நூலின் பெறுமதியைக் கணிப்பிடப் போதுமானவை. சட்டத்துறை சார்ந்த செயற்பாட்டாளர்களின் நெகிழ்ச்சி மிக்க உணர்வுக் கதம்பங்களாலும் அமரர் கௌரி சங்கரி தவராசா மீது அபிமானங் கொண்டவர்களின் ஆராதிப்புகளாலும் நண்பர்களின் நன்றிப் பெருக்காலும் அவரது சேவையைப் பெற்றுக்கொண்டவர்களின் நினைவுக் கீற்றுகளாலும் அழகு பெறுகின்றது. அமரர் கௌரி சங்கரி வாழும் போதே பெருமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய ஆளுமை என்பதை இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள கருத்துகள் மிக ஆழமாக நிலைநிறுத்துகின்றன. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத்தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு மூன்றிலிரு பெரும்பான்மையால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதில் இருந்து தற்போது 2022ஆம் ஆண்டு 12ஆம் இலக்கச் சட்டமாக திருத்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வந்தது வரைக்குமான கட்டம் கட்டமான படிமுறைப்படுத்தல்களை இங்கு மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியுமான வகையில் எழுதியிருக்கின்றார் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா. இலங்கை வரலாற்றில் மிகப் பிரபலமான வழக்குகள் பலவற்றை இங்கு நாம் படிக்க முடிகின்றது. இந்த வழக்குகளையெல்லாம் அமரர் கௌரி சங்கரியும் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவும் எப்படி வெற்றிகரமாக எதிர்கொண்டார்கள் என்பதை மிகச் சுவாரஸ்யமாகப் படிக்க முடியும். ஒரு சட்டம் எப்படி அதிகாரத்தின் பிடியில் சிக்குண்டு சின்னாபின்னமாகி எடுத்த எடுப்புக்கெல்லாம் விருப்பப்படி பயன்படுத்தப்பட்டது என்பதைத் துண்டாக உடைத்து நம் முன்னால் போட்டுவிடுகின்றார் கே.வி. இதனாலேயே இந்நூல் வெளியீடு மிகவும் அவதானத்துக்குரியதாகின்றது. எமது வெளியீட்டுப் பட்டியலில் இந்நூல் வெளியீடு என்பது மிகவும் பெறுமதியானதாக மாறுகின்றமைக்கு முக்கிய காரணம் கே.வி பற்றியதாவும் அமரர் கௌரி பற்றியதாகவும் இருப்பதே. இந்நூல் சட்டத்துறை மாணவர்கள் அனைவருக்கும் நிச்சயம் மிகுந்த பயனளிப்பதாய் இருக்கும் என்பதில் துளியும் ஐயம் கிடையாது.

கௌரி: நீதிக்கான குரல்
ஆசிரியர் : கே.வி.தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி
வெளியீடு : எஸ்.ஐ.எம்.பதிப்பகம்

கண்ணீரோடும் காத்திருப்போடும் நீங்காத நினைவுகளோடும்

கே.வி.தவராசா
ஜனாதிபதி சட்டத்தரணி.

நீதியை நிலைநிறுத்தும் போரில் சட்டபோராளிகளாய்

முஸ்டீன்
எழுத்தாளர், ஊடகவியலாளர்.

சமர்ப்பணம்
மாசுமறுவற்று மகத்தான மனிதாபிமானியாகி அன்பெனும் பேரொளியால் மனிதர் மனங் கவர்ந்து கருணையின் பேரூற்றாய் மண்ணெங்கும் பிரவகித்துமனிதத்தின் அடையாளமாகி பாரினில் நிலைபெற்று அநீதிக்கெதிரான சிம்மக்குரலாகி ஓங்கியொலித்து நீதியைநிலைநாட்ட இறுதிக்கணம் வரைப் பயணித்த இரும்புப் பெண் சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவுக்கு இந்நூல் சமர்ப்பணம்

DEDICATION
This Publication is devoted to The Gowry Shangary Thavarasha Senior Attorney-at-Law for her devotion of serving during to lifetime to safeguard and maintain the human dignity who was enchanted everyone with her vivacious smilenwho was the exemplary and foundation of the cordiality & sincerity who was the everlasting portrait of humanity and human dignity who made very loud roaring voice against injustice It is to say that she is a iron lady who fought to uphold justice & fairness.